பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. எதுக்கு தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 119 கிலோ மீட்டர் தூரத்தில், மூன்று வழித் தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டமானது, 3 வழித்தடங்களில் 120 ரயில் நிலையங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்த போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்து இருந்தார். இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அதற்காக 63 ஆயிரத்து 246 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ள பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், "சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி; இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தி முடிக்க உத்வேகத்துடன் செயல்படுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவரைத் தாண்டி, பாஜகவின் முக்கிய புள்ளிகள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டப்பணிக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி; தமிழகத்திற்கான உரிய பங்கை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்திவருகிறார்” தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணி: குற்றபத்திரிகையில் வெளியான பகீர் தகவல்கள்!
இவரைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?






