முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு பல கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இந்திய பிரதமர், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர், காங்கிரஸ் மூத்த தலைவர் என்று பல்வேறு அடையாளங்களுடன் திகழ்ந்த டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த டாக்டர்.மன்மோகன் சிங் நேற்று (டிச.26) இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவையொட்டி ஏழு நாட்கள் தூக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், பல்வேறு அரசு பதவிகளை வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய பொருளாதாரத்தை சீர்த்திருத்துவதில் பெரும் பங்காற்றி உள்ளார். தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள், மனித நேயம், களங்கமற்ற அரசியல் வாழ்க்கை என்றென்றும் அவரை நினைவுக்கூறப்படும் என்றார்.
துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இரங்கல் செய்தியில், 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மகத்தான பொருளாதார சீர்த்திருத்தத்துடன் தேசத்தை தைரியமாக வழிநடத்தினார். வளர்ச்சி மற்றும் செழுமைக்கான புதிய பாதைகளை திறந்து வைத்தார். அவரது பாரம்பரியம் வளர்ச்சி பாதைக்கு என்றென்றும் வழிக்காட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவில், 'முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து நாட்டின் நிதி அமைச்சராகவும், பிரதமராகவும் உயர்ந்தவர். இந்தியாவின் ஆட்சியில் மன்மோகன் சிங் முக்கியப் பங்காற்றினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், 'மன்மோகன் சிங், இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. நான் எனது வழிக்காட்டியை இழந்துவிட்டேன். அவரை போற்றிய கோடிகணக்கான மக்கள் மன்மோகன் சிங்கை பெருமையுடன் நினைவு கூறுவோம்' என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவரையும், ஈடுஇணையற்ற பொருளாதார நிபுணரையும் இந்த நாடு இழந்து விட்டது' என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன. அவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் மாதிரியான வளர்ச்சியானது நாட்டிற்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியது. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?