’ஆருயிர் நண்பர்’ சூப்பர்ஸ்டாருக்கு ராஜா கொடுத்த ஊக்கம்..இசைஞானியின் எக்ஸ் பதிவு!

ரஜினிகாந்த நலம்பெற வேண்டும் என இணையத்தில் சினி ஸ்டார்கள் பதிவிட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளார்

Oct 4, 2024 - 02:12
 0
’ஆருயிர் நண்பர்’ சூப்பர்ஸ்டாருக்கு ராஜா கொடுத்த ஊக்கம்..இசைஞானியின் எக்ஸ் பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. இந்தப் படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாட முடியாமல் சோகத்தில் உள்ளனர். ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதே ரசிகர்களின் சோகத்துக்கு காரணம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய பின்னர் தான் ரஜினியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. 

அதாவது கூலி படத்திற்காக மழையில் நனைந்தவாறு ரஜினி ஒரு காட்சியில் நடித்ததாகவும், அதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. கடுமையான வயிற்று வலியுடன், முதுகு வலி காரணமாகவும் ரஜினி அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து செப்.30ம் தேதி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. அவருக்கு இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது ரஜினிக்கு ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால், அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டென்ட் (Stent) பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

மேலும், மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பின்னர் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. முன்னதாக ரஜினிக்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பின்னர் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவர் நாளை வீடு திரும்புவார் என்ற தகவலை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

வேட்டையன் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், ரஜினியும் நாளை டிஸ்சார்ஜ் ஆகவுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி வேட்டையன் படக்குழுவும் உற்சாகத்தில் உள்ளது. அதேநேரம் சில தினங்கள் ஓய்வுக்குப் பின்னரே கூலி படத்தின் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்பார் எனத் தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில், ரஜினியுடன் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: போலி பட்டா விவகாரம் - மதுரை ஆட்சியர் அஜராகி விளக்கம்

இந்நிலையில், ரஜினிகாந்த நலம்பெற வேண்டும் என இணையத்தில் சினி ஸ்டார்கள் பதிவிட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளார். அப்பதிவில், ”மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக...” என இசைஞானி இளையராஜா பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow