சினிமா

போக்சோ வழக்கில் ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின்.. வலுக்கும் எதிர்ப்பு!

போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம்

போக்சோ வழக்கில் ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின்.. வலுக்கும் எதிர்ப்பு!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நிபந்தணையுடன் ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய விருது வழங்கும் விழாவை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் அலா வைகுண்டபுரமுலோ திரைப்படத்தில் இடம்பெற்ற புட்டா பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றவர் ஜானி மாஸ்டர்(Jani Master). இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.சமீபத்தில் 2022ம் வருட திரைப்படத்திற்கான விருதினை மத்திய அரசு அறிவித்தது. இதில் சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார்.

ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர் பிரபல நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில் ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய 16 வயதில் ஜானி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த நடனக்கலைஞர் புகாரில் தெரிவித்திருந்தார். 

இந்த புகாரை விசாரித்த காவல்துறை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் புகார் அளித்திருப்பது தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இவர் நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்ததோடு, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா ஃபிலிம் சேம்பரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த விசாரணையின் முடிவில் தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாலியல் புகார் எழுந்ததை அடுத்து தலைமறைவான ஜானி மாஸ்டரை காவல்துறையினர் தேடி வந்தனர்.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்தனர்

கடந்த ஆகஸ்ட் மாதம் 70வது தேசிய விருதுகள் வென்ற படங்கள், கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடன இயக்குநர் என்ற விருதை வென்றிருந்தார்.

இதையடுத்து தேசிய விருது விழா வழங்கும் நிகழ்ச்சிகள் வரும் வாரம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில், இதில் ஜானி மாஸ்டர் பங்கேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம். இவரது ஜாமின் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 10 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.