சாதிவாரி கணக்கெடுப்பு.. நாதக பேரணிக்கு அனுமதிக்கொடுத்து ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்..!
அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இனிவரும் காலங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கான கட்டணத்தை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி பொதுக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடைப்பெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டணத்தை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மார்ச் 16ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கோரியும், பஞ்சமி நில மீட்க கோரியும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா, முகூர்த்த நாள் எனவும், கலந்து கொள்வோரின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, பேரணி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவை ரத்து செய்து, பேரணி - பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா நடைப்பெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே பேரணி நடைபெறும் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், 400 பேர் முதல் 500 பேர் வரை பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவார்கள் என்றும் அமைதியான முறையில் பேரணி நடத்தப்படும் என தெரிவித்தார். இதன் பின் உத்தரவிட்ட நீதிபதி, பேரணி, பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க உத்தரவிட்டார்.
மேலும் பேரணி பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழக்குவதற்காக காவல்துறைக்கு 25,000 ரூபாய் வழங்க நாம் தமிழர் கட்சி நிர்வாகி சசிகுமார் வழங்க உத்தரவிட்டார். அப்போது மனுதாரர் தரப்பில், காவல்துறை பாதுகாப்பிற்காக பணம் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது
இதற்கு நீதிபதி, பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தான் காவல்துறை, தினந்தோறும் ஒவ்வொரு கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பணி அல்ல என நீதிபதி தெரிவித்தார்.
பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப்பணத்தில், காவல்துறை செயல்படுகிறது. மக்கள் பணத்தை விணடிக்க கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, திருபோரூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் பேரணியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதேனும் நிகழ்ந்து, இழப்பு ஏற்பட்டால் அதற்கு நாம் தமிழர் கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் காவல்துறை பாதுகாப்பிற்காக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்டதை நீக்கிய நீதிபதி, இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடைப்பெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டண தொகையை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
What's Your Reaction?






