பல்ஸை எகிறவைக்கும் பஸ்கள்! விலையில்லா மகளிர் பயணத்திற்கு உலை?
காலாவதியான பேருந்துகள் காலநீட்டிப்பு தேதியையும் தாண்டி இயங்கிக் கொண்டிருப்பதால் மக்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதாக அலறுகின்றன தொழிற்சங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அவலநிலை குறித்து விவரிக்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தயானந்தம், "1972ல் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், இப்போது கிட்டத்தட்ட 22 மண்டலங்கள், 8 கழகங்களாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவில் பிரச்னை இருந்ததில்லை.
தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய சலுகைகளிலும் குறை வந்ததில்லை. பேருந்து பராமரிப்பும் சரியாக செய்தார்கள். 1992க்கு பிறகு கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஆரம்பித்தது. தற்போது 45 ஆயிரம் கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பேருந்துகளின் பராமரிப்பை அரசால் செய்ய முடியவில்லை. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, எல்.ஐ.சி, பி.எல்.ஐ கூட்டுறவு சொசைட்டிகளில் இருக்கும் சேமிப்பு என அனைத்திலும் கைவைக்கிறார்கள். அப்பணத்தை எடுத்துதான் டீசல், பராமரிப்பு போன்ற நிர்வாக செலவுகளையே பார்க்கிறார்கள்.
இப்படியான சூழலில்தான் தில்லைநாயகம் கமிட்டி அளித்த ’6 ஆண்டுகளில் பேருந்தை மாற்றவேண்டும்' என்பதை ஏற்க மறுத்து, தி.மு.க. அரசு மீண்டும் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி, 'இது அரசுப் பேருந்து. தினமும் குறைந்தது 300 கிலோமீட்டருக்கு மேல் ஓடும். அதனால் அதிக காலம் இயக்க அனுமதிக்க முடியாது. எனவே, 9 ஆண்டுகள், 12 லட்சம் கி.மீ. வரை இயக்கிக்கொள்ளலாம்' என 2021ல் பரிந்துரைத்தது.
ஆனால், 2022 நிலவரப்படி, 15 ஆண்டுகள் முடிவடைந்த ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், 15 ஆண்டுகள் நிறைவடைந்த அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்களை இன்னும் ஓராண்டு, அதாவது செப்டம்பர் 2024 வரை இயக்கிக்கொள்ளலாம் என 2023ல் கால நீட்டிப்பு செய்தது அரசு. ஆனால், அந்த காலமும் முடிவடைந்தும் காலாவதியான பேருந்துகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கான பராமரிப்பு செலவும் அதிகரித்து, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.7,500 கோடிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. மாற்றுத்திறனாளி, மகளிர் பயணத் தொகை மானியத்தை ரீஇம்ஃபியூஸ்மென்ட்டாகவும் டீசல் மானியமாகவும் ரூ.1500 கோடி தான் இந்த அரசு தருகிறது.
மின்சாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையை கடன் வாங்கி சரிசெய்யலாம் என அரசு முடிவுக்கு வந்தது. சமீபத்தில், அதில் 50 ஆயிரம் கோடி நிதியை மின்துறைக்கு கொடுத்துவிட்டோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சொல்கிறார். நாங்களும் சேவை துறைதான். எங்களையும் கொஞ்சம் பாருங்கள் என்றுதான் சொல்கிறோம்.
நிதிப் பற்றாக்குறை நிலவுவதால், புதிய பேருந்துகளை இவர்களால் வாங்க முடியவில்லை. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான சலுகைகளைத் தர முடியவில்லை. 2016ல் இருந்து போக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படிகூட உயர்த்தித் தருவதில்லை. இவை எல்லாம் சரிசெய்யப்பட்டால்தான் போக்குவரத்துத் துறையை நல்ல நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.
இதற்கிடையே, நிலுவைத்தொகை சேர்ந்துவிட்டது எனச் சொல்லி தனியாரை நோக்கி அரசு செல்கிறது. சென்னையின் 8 மண்டலங்களில் 53 மினி பஸ்கள் ஓடுகின்றன. அரசுப் பேருந்து ஓடும் ரூட்டையும் தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கிறது. அதேபோல, மின்சாரப் பேருந்தை வாங்க அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. அப்படி வாங்கப்படும் பேருந்தை தனியார்தான் பராமரித்து இயக்கவிருக்கிறது. இதன் மூலம் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, சரியான ஊதியம் உள்ளிட்டவை பாதிக்கப்படும். சமூக நீதியே இல்லாமல் போய்விடும்' என்றார் ஆதங்கமாக.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டியூ) பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் பேசுகையில், "தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் நகர்ப்புற பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் 95 சதவிகித பேருந்துகள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. 9 வருடம் 12 லட்சம் கி.மீ. என்ற வரன்முறையைத் தாண்டி சுமார் 7,000 பஸ்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இருந்தும் பற்றாக்குறை வர காரணம், நம் மாநிலத்தில்தான் பேருந்து கட்டணம் மிகவும் குறைவு. எல்லா கிராமப்புறங்களுக்கும் டவுன் பஸ் இங்கு மட்டும்தான் இயக்கப்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் குறைந்த செலவில் நகரம் வந்து செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.
மகளிர் மற்றும் 30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பயணம் கொடுக்கிறோம். இதனால் தமிழ்நாட்டின் ஜி.டி.பி. கூடியிருக்கிறது. இப்படி வளர்ச்சி இருக்கும்போது அதற்கான பணத்தை செலவு செய்ய வேண்டிய அரசு, அதை செய்வதில்லை. பற்றாக்குறையை சமாளிக்க போக்குவரத்துக் கழகம் கடன் வாங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று பேருந்தில் ரூ. 100 வசூல் என்றால். அதில் ரூ.15 வாங்கிய கடனுக்கான வட்டிக்கே சென்றுவிடுகிறது. இதனால் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
பஸ்ஸை ரிப்பேர் செய்வதற்கான ஸ்பேர் பார்ட்ஸும் வாங்கித் தருவதில்லை. ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக் உள்ளிட்ட 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. நிரந்தர ஓட்டுநர் சம்பளத்தைவிட கூடுதல் சம்பளத்துக்கு (ரூ. 1041) கான்ட்ராக்ட் டிரைவரை இப்போது அரசே எடுக்கிறது. இதற்கு நிரந்தர ஓட்டுநர்களையே எடுக்கலாமே.
2017ல் 22 ஆயிரம் பேருந்துகள் கழகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. இப்போது 19,500 பேருந்துகள் தான் ஓடுகின்றன. மக்கள்தொகைக்கு ஏற்ப பேருந்து எண்ணிக்கையை கூட்டாமல், இங்கு குறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான், விழாக்கால பேருந்து தட்டுப்பாட்டால் தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து இயக்கினார்கள். அவர்கள் ரூ31 வசூல் செய்து கொடுத்துவிட்டு, ரூ.51ஐ வாடகையாக வாங்கிச் சென்றுவிட்டார்கள். போகிற போக்கில் அரசு போக்குவரத்தை, அரசாங்கம் படிப்படியாக தனியார்மயம் ஆக்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது” என்றார் வருத்தமாக.
இதுகுறித்து விளக்கம் கேட்க போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரை தொடர்பு கொண்டோம். அழைப்பை ஏற்ற அமைச்சரின் உதவியாளர், 'அமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறார். அவரிடம் இதுபற்றி சொல்லி, நானே மீண்டும் அழைக்கிறேன்’ என்றார். ஆனால், அதன்பிறகு நாம் பலமுறை அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை.
What's Your Reaction?






