Poonamalle Plot Issue : பூவிருந்தவல்லி எம்ஜிநகரில் உள்ளது சாய் முகில் அடுக்குமாடி குடியிருப்பு. இங்குள்ள S-2 பிளாட்டில், சாந்தி புகழேந்தி என்பவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குத்தகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இதேபோல், அதே குடியிருப்பில் உள்ள T2 பிளாட்டில், ப்ரீத்தா என்பவரும் குத்தகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்த இரண்டு பிளாட்டுகளும், மருத்துவர் மணிவண்ணன் என்பவரது மகள் ரேஷ்மாவுக்கு சொந்தமானது. மருத்துவர் மணிவண்ணன், ஐயப்பன்தாங்கலில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர், அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்ற வங்கி அதிகாரிகள், சாந்தி புகழேந்தி, ப்ரீத்தா இருவரிடமும், இந்த வீடுகள் வங்கி கடனில் வாங்கியவை என்றும், ஆனால் கடனை சரியாக கட்டாததால் ஜப்தி செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல், வரும் 15ம் தேதிக்குள் காலி செய்துவிட வேண்டும் எனக் கூறி, நோட்டீஸும் ஒட்டிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியான சாந்தியும் ப்ரீத்தாவும், இதுகுறித்து மருத்துவர் மணிவண்ணனிடம் சொன்னதோடு, தங்களது குத்தகை பணத்தையும் திருப்பிக் கேட்டுள்ளனர்.
சாந்தி புகழேந்தி 10 லட்சம் ரூபாயும், பிரீத்தா 7 லட்சமும் குத்தகை பணமாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு சரியான பதில் சொல்லாத மருத்துவர் மணிவண்ணன், ஒருகட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும், வீட்டுக்கு சென்றவர்கள் மீது, நாயை ஏவியும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இருவரும், பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவர் மணிவண்ணனை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள அவரது மகள் ரேஷ்மாவை தேடி வருகின்றனர். இதனிடையே, வீட்டை விற்க முயற்சி செய்து வருவதாகவும், அதன்பின்னர் இருவருக்கும் பணத்தை செட்டில் செய்கிறேன் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் வங்கி அதிகாரிகளோ, வரும் 15ம் தேதி இரு வீட்டையும் ஏலம் விட திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொருபக்கம் மருத்துவர் இதேபோல் பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது மருத்துமனையில் தனியார் மருந்து கம்பனியில் இருந்து மருந்து பொருட்களை வாங்கிவிட்டு, 6 மாதமாகியும் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. வங்கி கடனுக்கு இஎம்ஐ கட்டாமல், வீட்டை குத்தகைக்கு விட்டு 17 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.