அமைச்சர் vs தளபதி.. மதுரை திமுக நிலவரம்..ஒரே கலவரம்! கொந்தளிக்கும் தலைமை!

மதுரையில் அமைச்சர் பிடிஆர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தை மாவட்ட செயலாளர் கோ.தளபதி புறக்கணித்துள்ள சம்பவம் மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கும், எம்.எல்.ஏவுக்கும் பனிப்போர் நீடிப்பது ஏன்? மதுரை திமுகவின் நிலவரம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Feb 11, 2025 - 17:56
Feb 11, 2025 - 18:11
 0
அமைச்சர் vs தளபதி.. மதுரை திமுக நிலவரம்..ஒரே கலவரம்! கொந்தளிக்கும் தலைமை!
அமைச்சர் vs தளபதி.. மதுரை திமுக நிலவரம்..ஒரே கலவரம்! கொந்தளிக்கும் தலைமை!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், திமுக எம்.எல்.ஏ தளபதிக்கும் லோக்கல் அரசியலில் எப்போதுமே ஏழாம் பொறுத்தம் தான். ஏற்கனவே மதுரை மாநகர் திமுக செயலாளர் பொறுப்புக்கு எழுந்த ரேஸ், 2023ம் ஆண்டில் மதுரை மாநகராட்சியில் திமுகவை சேர்ந்த மேயர், மண்டல தலைவர்கள்,கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி பூசல் பிரச்சனை என, அனைத்திலும் பிடிஆரும்,  கோ.தளபதியும் எதிரும் புதிருமாகவே இருந்து வந்தனர். இதன்பிறகு, மதுரை மாநகர் திமுகவை இரண்டாக பிரிக்க  அமைச்சர் பிடிஆர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது. இப்படி நடந்தால்  ஏரியாவில் மவுசு குறைந்துவிடுமோ என யோசித்து, பிடிஆருக்கு எதிரான நிலைப்பாட்டை கோ.தளபதி எடுப்பதாகவும் மதுரை திமுக கூடாரத்தில் முணுமுணுக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக அப்போது நிதியமைச்சராக இருந்த பிடிஆரை தனது சென்னை வீட்டிற்கு சென்று கோ.தளபதி வாழ்த்து கூறியிருந்தார். கோ.தளபதியின் இந்த செயல் மதுரை மாநகர திமுக நிர்வாகிகளை வாயடைத்துப்போக செய்தது. இந்நிலையில் மதுரை மாநகரில் எந்த பிரச்சனையும் இல்லை என தலைமை பெருமூச்சு விட்ட வேளையில் தான் மீண்டும் ஒரு பிரச்சனை தலைதூக்கியுள்ளது.

அதாவது, பிப்ரவரி 9ம் தேதி மதுரை திமுக சார்பில் செல்லூரில் மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகரில் பிடிஆர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திமுக மதுரை மாவட்ட செயலாளர்  கோ.தளபதியும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்கவில்லை. திமுக தலைமையின் உத்தரவின் பெயரில் நடக்கும் ஒரு கூட்டத்தில் ஒரு மாவட்ட செயலாளர் பங்கேற்காமல் போனது பெரிதாக பேசப்பட்டது.

முன்னதாக, தனது தரப்பு ஆதரவாளர்களை தவிர்த்து கட்சியின் கொள்கை பரப்பு செயலர் லியோனியை மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்  கோ.தளபதி. இதுதொடர்பாக வெளியான அழைப்பிதழ் தான் அறிவாலயத்தையே ஆடிப்போக வைத்ததது. அந்த அழைப்பிதழில் மாவட்ட செயலாளர்  கோ.தளபதிக்கு பின், அமைச்சர் தியாகராஜன் பெயர் கடைசியாக இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த பிடிஆர் ஆதரவாளர்கள் தலைமையின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல, அவர்களோ  கோ.தளபதியிடம் அமைச்சரின் பெயரையே முதலில் போடவேண்டும் என கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனை கேட்டுக்கொண்ட  கோ.தளபதி, தலைமை கூறியது போல் அழைப்பிதழை மாற்றியும் உள்ளார்.இந்நிலையில் தான் அமைச்சர் பிடிஆர் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்து தலைமைக்கே ஷாக் கொடுத்திருக்கிறார்  கோ.தளபதி. இந்நிலையில், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்  கோ.தளபதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என அவரிடமே கேட்டோம். அதற்கு அவர், தனக்கு பல்வலி ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனால் தான் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி லைனை துண்டித்தார்.

இந்நிலையில், ஒரு அமைச்சருக்கும், மாவட்ட செயலாளருக்கும் இடையே நடக்கும் இந்த அதிகாரத்திற்கான போட்டி எப்போது ஒரு முடிவுக்கு வருமோ என மதுரை உடன் பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow