தமிழ்நாடு

கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க  தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு
கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு

சென்னை  விமான நிலையத்தில்  சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரத்தில் இருந்து 55 ஆயிரம் வரை இருந்தது. அந்த எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து 60 ஆயிரத்தையும் கடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு இடையே, தற்போது கோடை விடுமுறைகள் தொடங்க இருப்பதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச முனையத்தில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. 

நள்ளிரவு, அதிகாலை மற்றும் வார கடைசி நாட்களில் ஒரே நேரத்தில் பல விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு செல்வதால், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. 

சென்னை சர்வதேச முனையத்தில் பயணிகளுக்கு, பாதுகாப்பு சோதனைகள் நடத்தக் கூடிய கவுண்டர்கள் தற்போது, ஏ, பி, சி என்று 3 பிரிவுகளாக, ஒரு பிரிவுக்கு 24 கவுண்டர்கள் வீதம், மொத்தம் 72 கவுண்டர்கள் உள்ளன. இந்த 72 கவுண்டர்களிலும், பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், பயணிகள் சோதனைகளை முடித்து விட்டு, விமானங்களில் ஏறுவதற்கு காலதாமதம் ஆகிவிடுகின்றன. இதனால் துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, லண்டன் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் புறப்பாடு தாமதமாகின்றன. இந்த நிலையில் வருகின்ற கோடை விடுமுறைகளில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் செக்கின் கவுண்டர்கள் சென்னை சர்வதேச முனையத்தில்  ஏற்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்போது 2வது கட்டமான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதில் முன்றில் அமைக்கப்படும் செக்கின் கவுண்டர்களில், 48 கவுண்டர்கள், டெர்மினல் 2 செக்கின் கவுண்டர்களுடன் இணைக்கப்பட்டு, 120 கவுண்டர்களாக, பகுதி டி, இ புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக சோதனை அடிப்படையில், நள்ளிரவு மற்றும் அதிகாலை போன்ற நெரிசல் நேரங்களில், கூடுதல் கவுண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா, எமிரேட்ஸ், இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களின், சர்வதேச விமானங்கள், புதிய கவுண்டர்களை சோதனை அடிப்படையில்  பயன்படுத்தி வருகிறது. இந்த கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் தற்போது செயல்பட்டு வந்தாலும், வருகின்ற வாரத்தில் இருந்து நிரந்தரமாக செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு சோதனைகள் முடிந்து பயணிகள் விமானத்தில் ஏறி செல்வதற்கு, ரிமோட் போர்டிங் கேட்களும் கூடுதலாக ஏற்படுத்தப்படுகின்றன. 

இப்போது முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஏர் இந்தியா, எமிரேட்ஸ், இண்டிகோ, சர்வதேச விமான பயணிகள் மட்டும் கூடுதல் செக்கின் கவுண்டர்களை பயன்படுத்தி வந்தாலும், படிப்படியாக மற்ற விமான நிறுவனங்களான சிங்கப்பூர், பிரிட்டிஷ், கத்தார், மலேசியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட மேலும் சில விமான நிறுவன பயணிகளும் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கோடை விடுமுறை பயணிகள் கூட்ட நெரிசலை சமாளித்து விட முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு, கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் நெரிசலை எதிர் கொள்வதற்கு 2வது கட்ட பணிகள் நிறைவடைந்து, முனையம் 3 திறப்பு விழா நடந்து விடும். அப்போது மேலும் 72 செக்கின் கவுண்டர்கள், கூடுதல் ரிமோட் போர்டிங் கேட்கள், பயணிகள் செல்வதற்கான கூடுதல் வழிகள் ஏற்படுத்தப்பட்டு விடும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல்கள் இல்லாமல், விமானங்களில் ஏற முடிவதோடு, விமானங்களும் தாமதம் இல்லாமல் புறப்பட்டு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.