ஆம்ஸ்ட்ராங்.. பொற்கொடி.. க்யூட் பேபி சாவித்திரிபாய்.. பிறந்தநாள் கொண்டாடி 3 மாதம் முடியலையே!

ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையை மட்டுமல்லாது தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ளது. அன்பான மனைவி அழகான குழந்தை என்று மகிழ்ச்சியோடு வாழ்ந்த அரசியல் கட்சித்தலைவரின் வாழ்க்கையை ஒரு படுகொலை சம்பவம் புரட்டி போட்டுள்ளது. பெண் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடி சில மாதங்களே கடந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர் மட்டுமல்லாது பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இப்படி கொடூரமாக கொல்லப்பட்டார் என்று பலரும் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

Jul 6, 2024 - 14:56
Jul 6, 2024 - 15:09
 0
ஆம்ஸ்ட்ராங்.. பொற்கொடி.. க்யூட் பேபி சாவித்திரிபாய்.. பிறந்தநாள் கொண்டாடி 3 மாதம் முடியலையே!
armstrong family and baby birthday

சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தார். திருப்பதியில் சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2000ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார்.பூவை மூர்த்தியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி தனித்து செயல்பட்டு வந்தார். 

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் தலித் அரசியலை தீவிரமாகப் பேசி வந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.. அதிலும், அம்பேத்கரிய வழியில் பௌத்த மதத்தை தழுவி பௌத்த நிகழ்வுகளையே முன்னெடுத்து வந்திருக்கிறார்.. தலித் அரசியல் இயக்கங்கள் நடத்திய பௌத்த நிகழ்வுகளில் ஆம்ஸ்ட்ராங் தவறாமல் கலந்து கொண்டுள்ளார்..

அரசியல் வாழ்க்கையோடு சமூக சேவையாக பலரும் கல்வி கற்க உதவி செய்துள்ளார் ஆம்ஸ்ட்ராங். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பூரை சேர்ந்த வழக்கறிஞர் பொற்கொடி என்பவருடன் திருமணம் பௌத்த முறைப்படி சென்னையில் நடைபெற்றது. தாலி கொடியில் பிஎஸ்பி தலைவர் மாயாவதி, அம்பேத்கர் படங்களும் இடம் பெற்றிருந்தன. 

தவமாய் தவமிருந்த ஆம்ஸ்ட்ராங் பொற்கொடி தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்தது.கடந்த ஆண்டு புத்த பூர்ணிமா அந்த குழந்தைக்கு சாவித்ரிபாய் என்று பெயர் சூட்டினார் மாயாவதி. பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் மகளுக்கு சாவித்திரி பாய் என்று பெயர் வைத்தார்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பெண்களுக்கு கல்வி வழங்கிய கல்வித் தாயுமான சாவித்ரிபாய் புலே ஆவார்.
அவரது பெயரை பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி தமிழ்நாடு மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தம்பதியரின் பெண் குழந்தைக்கு பௌத்தர்களின் புனித நாளான புத்த பூர்ணிமா நாளில் சாவித்திரி பாய் என்று பெயர் வைத்தார் மாயாவதி.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மிகவும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் மகளின் பிறந்தநாளை கொண்டாடினார் ஆம்ஸ்ட்ராங். அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் பலரும் இந்த பிறந்தநாளில் பங்கேற்று வாழ்த்தினர்.அந்த பிறந்தநாள் நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. பலரும் ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்தையும் வீடியோவையும் பார்த்து கண்ணீருடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
பெரம்பூரில் புது வீடு ஒன்றையும் கட்டிக்கொண்டிருந்தார் ஆம்ஸ்ட்ராங். தினந்தோறும் அந்த இடத்திற்கு சென்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

ஆம்ஸ்ட்ராங் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவரை மட்டும்தான் பார்ப்பார். தன்னை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாதவாறு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார்.அவரது ஆதரவாளர்கள் நிழல் போல் 24 மணி நேரமும் உடனிருந்து வந்ததாக தெரிகிறது.அரசியல் செல்வாக்குடன் இருந்தாலும் பழைய பகை அவரை பழி தீர்க்க காத்திருந்தது. பௌர்ணமி நாட்களில் புத்தரை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஆம்ஸ்ட்ராங். அவரை வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு சென்றது மர்ம கும்பல் ஒன்று. குத்துயிரும் கொலை உயிருமாக ரத்த வெள்ளத்தில் துடித்தவரை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். ஆம்புலன்ஸ் சென்று சேர்வதற்குள் அவரது உயிர் அடங்கி விட்டது. பலரது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த ஆம்ஸ்ட்ராங் இன்று உயிரோடு இல்லை என்று கதறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். பல ஆண்டு காலமாக தொடரும் பழிக்கு பழி படுகொலைகள் சென்னை நகரில் மீண்டும் ஒரு ரத்த சரித்திரத்தை எழுதியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow