கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... கதறி அழுத பா ரஞ்சித்... இருவருக்கும் அப்படியொரு தொடர்பா..?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரது உடற்கூராய்வு நிறைவுபெற்றது. அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து இயக்குநர் பா ரஞ்சித் கதறி அழுதது வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Jul 6, 2024 - 18:18
Jul 6, 2024 - 18:34
 0
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... கதறி அழுத பா ரஞ்சித்... இருவருக்கும் அப்படியொரு தொடர்பா..?
Director Pa Ranjith in BSP Armstrong Death

சென்னை: அயனாவரம் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்றிரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்க்க வந்த நேரத்தில், அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. ரத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய ஆம்ஸ்ட்ராங்கை, அவரது குடும்பத்தினரும் ஆதரவளார்களும் க்ரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற இயக்குநர் பா ரஞ்சித், தேம்பி தேம்பி அழுதார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பா ரஞ்சித்துக்கும் கொலையான ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே அப்படி என்ன நட்பு என ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்தன. அதேபோல், உடற்கூராய்வுக்காக ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் இயக்குநர் பா ரஞ்சித் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடற் கூராய்வு முடிந்த பின்னர் அவரது சடலத்தை வாங்க ஆதாரவாளர்களும் குடும்பத்தினரும் மறுத்துவிட்டனர். 

அதேநேரம் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவனும் இயக்குநர் பா ரஞ்சித்தும் அஞ்சலி செலுத்தச் சென்றனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து திருமாவளவன் கண் கலங்கிப் போய் செய்வதறியாது நிற்க, பா ரஞ்சித் கதறி கதறி அழுதார். விசிக தலைவர் திருமாவளவன் கைகளைப் பிடித்துக்கொண்டு பா ரஞ்சித் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண் கலங்கச் செய்தது. ஆம்ஸ்ட்ராங் மறைவால் பா ரஞ்சித் இந்தளவிற்கு உடைந்து போக என்ன காரணம் என்று தெரியுமா.? அதாவது ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்கும் முன்பே, ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க உதவி செய்துள்ளார். அவர்களில் பா ரஞ்சித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பா ரஞ்சித்தும் மாணவர்களின் கல்வி, விளையாட்டு போன்றவற்றை ஊக்கப்படுத்த பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து பணியாற்றியதாக சொல்லப்படுகிறது. அப்போது அவருக்கும் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. பா ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான போதும் அவருக்கு ஆம்ஸ்ட்ராங் பல ஆலோசனைகள் வழங்கி உற்சாகப்படுத்தியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல், பா ரஞ்சித் மேடையில் பேசும் போது ஜெய்பீம் என முழங்குவதும் ஆம்ஸ்ட்ராங்கிடம் இருந்து கற்றுக்கொண்டது தான் என கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஆம்ஸ்ட்ராங் தான் பா ரஞ்சித்தின் அரசியல் குரு என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், 2019ல் ப ரஞ்சித் நடத்திய வானம் கலை திருவிழாவிலும் ஆம்ஸ்ட்ராங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். பா ரஞ்சித் இயக்கிய படங்களாக இருந்தாலும், தயாரிக்கும் படங்கள் என்றாலும் அவைகளுக்கு முதல் விமர்சனம் ஆம்ஸ்ட்ராங்கிடம் இருந்து தான் வருமாம். அந்தளவிற்கு இருவருமே அரசியல், சித்தாந்தம் என தொடர்ந்து பயணித்து வந்துள்ளனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பா ரஞ்சித்துக்கு பெரும் இழப்பாகியுள்ளது. இதனை தாங்க முடியாமல் தான் பா ரஞ்சித் கதறி அழுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow