சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்றிரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 8 பேர் கைதாகியுள்ள நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் அரிவாளால் வெட்டியும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தமிழக அரசுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு இரங்கலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியிருந்தனர்.
இந்த வரிசையில், மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டிவீட் செய்துள்ள நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல். குற்றவாளிகளுக்கு சட்டபடி தண்டனை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புவதாக பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றுள்ளார்.
Deeply shocked by the brutal and abhorrent killing of Thiru Armstrong, the Tamil Nadu Chief of the Bahujan Samaj Party.
— Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2024
My heartfelt condolences go out to his family, friends and followers.
Tamil Nadu Congress leaders are in constant touch with the Government of Tamil Nadu, and…
பாஜகவைச் சேந்த தமிழிசை செளந்தர்ராஜனும் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக, விசிக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக மூத்த தலைவர் எல் முருகன் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரித்துள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பில் உள்ள காவல்துறையும் உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதையே இந்த படுகொலை நிரூப்பித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர். அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.
ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அப்படிப்பட்டவர் திடீரென கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்ஸ்ட்ராங் மறைவு வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம்ஸ்ட்ராங் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அப்படிப்பட்ட ஒருவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது.
கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே அப்பொறுப்பில் இருப்பதும், அவரைச் சுற்றியுள்ள சக்திகள் தான் முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்கின்றன என்பதும் தான் நிலைமை மோசமடைவதற்கு காரணமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 5, 2024
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும்… pic.twitter.com/CwdvW1KLx8
அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்…
— Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2024
மேலும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்.? ஏற்கனவே சேலம், கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை, நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 5, 2024
தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது… pic.twitter.com/Em5sAi2Okn
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். ஆம்ஸ்ட்ராங் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! என பதிவிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மஜக தலைவர் தமிமூன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.