ஒரே நேரத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டுகள் மிரட்டல்... தமிழகத்தில் தொடரும் சம்பவம்!

ஏர் இந்தியாவின் சிங்கப்பூர் விமானம், இண்டிகோவின் ஜெய்ப்பூர் விமானம், ஆகாஷாவின் பெங்களூர் விமானம், ஆகிய விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்களுக்கு டார்க் நெட் எனப்படும் முகவரி இல்லாமல் வரும் இணையதள மிரட்டல் தகவல் வந்ததால், சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Oct 24, 2024 - 23:47
 0
ஒரே நேரத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டுகள் மிரட்டல்... தமிழகத்தில் தொடரும் சம்பவம்!
ஒரே நேரத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டுகள் மிரட்டல்... தமிழகத்தில் தொடரும் சம்பவம்!

இன்று பகல் 12:30 மணி அளவில்,ஏர் இந்தியா, இண்டிகோ, மற்றும் ஆகாஷா ஆகிய விமான நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு, மர்மமான முறையில் முகவரி இல்லாமல் டார்க் நெட் இணையதளம் மூலம், விமானங்களுக்கு வெடி குண்டுகள் மிரட்டல்கள் வந்தன. ஏர் இந்தியாவுக்கு வந்த மிரட்டல் மெயிலில், சிங்கப்பூரிலிருந்து 124 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மெயிலில், ஜெய்பூரில் இருந்து 146 பயணிகளுடன் வந்து கொண்டு இருக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து இன்று பகல் 1.40 மணிக்கு, பெங்களூர் புறப்பட இருந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக, ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு வந்த மிரட்டல் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விமான நிறுவனங்கள், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு அவசர தகவல் அனுப்பினர். இதனால் சென்னை விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர் உடனடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று பகல் 1.18 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டதும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி பரிசோதித்தனர். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை எனவும் இது வெறும் புரளி என்றும் தெரியவந்தது. 

அதேபோல் ஜெய்ப்பூரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பகல் 1.05 மணிக்கு, பத்திரமாக வந்து தரையிறங்கியது. பயணிகள் கீழே இறங்கியதும், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் இல்லாததால் இதுவும் புரளி என்று தெரிந்தது. இதையடுத்து பகல் 1.40 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல இருந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்துக்குள்ளும் வெடிகுண்டு நிபுணர்கள் ஏறி பரிசோதித்தனர். மற்ற இரண்டு விமானங்களுக்கு வந்தது போலவே இதுவும் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 2.05 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூருக்கு, வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. 

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 விமானங்களுக்கு, வெடிகுண்டுகள் புரளி, டார்க் நெட் இணையதளம் மூலமாக அனுப்பிய அந்த மர்ம ஆசாமிகள் யார்? என்று சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதே நேரத்தில் மர்ம ஆசாமிகள், டார்க் நெட் இணையதளம் மூலம் அனுப்பியுள்ளதால், தகவல் அனுப்பிய முகவரியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் சைபர் கிரைம் பிரான்ஞ் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் மர்ம ஆசாமிகளை பிடிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow