வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Dec 2, 2024 - 11:41
 0
வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
முத்துசாமி-ராஜேந்திரன்

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தன்னுடைய ஆட்டத்தை காண்பித்து சென்றது. புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாநகராட்சி பணியாளர்கள் வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டாலும் ஒரு சில இடங்களில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இதையடுத்து, வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  ஃபெஞ்சல் புயலானது புதுச்சேரி-காரைக்கால்  இடையே கரையை கடந்த நிலையில், கடந்த 15 மணி நேரத்திற்கும் மேலாக விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 
தமிழகத்திலே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவில் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மயிலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 49.29 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணகிரியில் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரிக்கு அமைச்சர் முத்துசாமியும், தருமபுரிக்கு அமைச்சர் ராஜேந்திரனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் கேட்டறிந்தார்.

சென்னையில் இருந்து விழுப்புரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம்  பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow