'வெளிநாட்டில் இந்தியாவை மீண்டும் அவமானப்படுத்துவதா?'.. ராகுல் காந்தி மீது பாய்ந்த பாஜக!
''ராகுல் காந்தி போன்றவர்கள் நமது நாட்டின் உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் வெளிநாட்டில் அவமதிப்பு செய்கின்றனர். நமது நீதித்துறையின் செயல்பாடுகளையும், நமது ஜனநாயகத்தையும் விமர்சிக்கின்றனர்'' என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் சென்றடைந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் சார்பில் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இந்திய வம்சாவளியினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசினார். இதற்கிடையே டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை நிலவி வருவதை சுட்டிக்காட்டினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ''இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை நிலவி வருகிறது. ஆனால் பல நாடுகளில் வேலையின்மை பிரச்சனை இல்லை. மிக முக்கியமாக சீனாவில் இந்த பிரச்சனை நிச்சயமாக இல்லை. இப்போது சீனா உலகின் உற்பத்தி மையமாக திகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின் உற்பத்தி செயல்தான் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. ஆகவே இந்தியா, உற்பத்தி செயல் முறையை ஒழுங்கமைக்க வேண்டும்.
இந்தியாவில் தற்சார்பு உற்பத்தி முழுமை அடைந்தால்தான் சீனாவுடன் போட்டியிட முடியும். பலர் இந்தியர்களுக்கு திறமை இல்லை என்று கூறுகின்றனர். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் திறமைசாலிகளுக்கு இந்தியா மதிப்பு கொடுப்பதில்லை. நமது கல்வித்துறையில் கருத்தியல் பிடிப்பு முரண்பாடுகள் உள்ளது'' என்று தெரிவித்தார்.
இதேபோல் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார். ''தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே பா.ஜ.க மீதும், இந்திய பிரதமர் மோடி மீதும் மக்கள் கொண்டிருந்த அச்சம் விலகிவிட்டது. இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, மனிதநேயம் இப்போது இல்லை. ஆர்எஸ்எஸ் ஒரு சில மதம், மொழி, சமூகத்தை உயர்வாக கூறி இந்திய மாநிலங்களிடையே பிளவு ஏற்படுத்த பார்க்கிறது'' என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டில் மீண்டும் ஒருமுறை இந்தியாவை அவமானப்படுத்தி விட்டதாக பஜாக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''வெளிநாட்டில் வைத்து இந்தியாவையும், பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஸையும் குறை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ராகுல் காந்தி இப்போது அதை அதிகப்படுத்தியுள்ளார். தனது முதிர்ச்சியின்மையை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.
ராகுல் காந்தி போன்றவர்கள் நமது நாட்டின் உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் வெளிநாட்டில் அவமதிப்பு செய்கின்றனர். நமது நீதித்துறையின் செயல்பாடுகளையும், நமது ஜனநாயகத்தையும் விமர்சிக்கின்றனர். ராகுல் காந்தியை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அழைப்பவர்களை வைத்தே அவர்களின் நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும்'' என்றார்.
What's Your Reaction?