'போராட்டத்தை விட்டு பண்டிகையை கொண்டாடுங்கள்'.. மமதா பானர்ஜியின் பேச்சால் சர்ச்சை!
''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா?'' என்று மருத்துவ மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் கூட இரக்கமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கொடூரர்களால் மாணவி சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் படுகொலையை கண்டித்து முதலில் கொல்கத்தாவில் நடந்த போராட்டம், பின்பு பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'மருத்துவ மாணவி படுகொலையில் உண்மை மறைக்கப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என்று கொல்கத்தா நகரில் மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொல்கத்தா போலீசார் முடக்கி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இது தொடர்பாக மருத்துவ மாணவியின் பெற்றோரும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டி இருந்தனர். ''ஒருபக்கம் மமதா பானர்ஜி எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பேரணி செல்கிறார். ஆனால் மறுபக்கம் எனது மகளுக்காக போராடுபவர்களை காவலர்களை வைத்து ஒடுக்குகிறார். ஏன் இந்த இரட்டை வேடம்?'' என்று அவர்கள் கூறி இருந்தனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் போராடுபவர்கள் போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் பங்கேற்க வேண்டும் என மமதா பானர்ஜி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, ''கொல்கத்தாவில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடந்து வருகிறது. நீங்கள் தினமும் இரவு சாலையில் போராட்டம் நடத்தி வருவது மக்களுக்கு இடையூறாக உள்ளது.
போராட்டத்தின்போது ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது முதியவர்களுக்கு இடையூறை தருகிறது. இரவு 10 மணிக்கு மேல் ஸ்பீக்கர்களை பயன்படுத்தக்கூடாது. மருத்துவ மாணவிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. விசாரணை இப்போது சிபிஐ கைகளில் உள்ளது. மாணவிக்கு விரைவில் நீதி கிடைப்பதை சிபிஐ உறுதி செய்ய வேண்டும். ஆகவே போராடுபவர்கள் போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் பங்கேற்க வேண்டும். பண்டிகைகளில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
மமதா பானர்ஜியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு 'எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்' அமைந்து விட்டது. இதனால் போராட்டக்காரர்களும், மாணவியின் பெற்றோரும் கொதித்தெழுந்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவியின் பெற்றோர், ''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா? தனது குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து அவர் இதே வார்த்தையை கூறுவாரா? மகளே போய் விட்டார். இனி எந்த பண்டிகையையும் நாங்கள் கொண்டாட மாட்டோம்'' என்றனர்.
இதேபோல் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, ''மாணவியின் நீதிக்காக மக்கள் போராடி வருகின்றனர். உங்கள் சொல்லை கேட்க மக்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல. நமது தாய்மார்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் கண்டிப்பாக அவர்களை (மமதா பானர்ஜி) அகற்றுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?