வரலாற்று சாதனை படைத்தது வங்கதேசம்.. பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம் அணி.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, அந்த அணிக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட், ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் கடமைக்கு ஆடியது போல் விளையாடினர்.
அதிகப்பட்சமாக சைம் அயூப் 58 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும், சல்மான் அகா 54 ரன்களும் எடுத்தனர். கடந்த சில இன்னிங்ஸ்களில் சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த இன்னிங்ஸிலும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அட்டகாசமாக பந்துவீசிய வங்கதேச பந்துவீச்சாளர் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் தொடங்கிய வங்கதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிர்ச்சி அளித்தனர். ஷாகிர் ஹசன் (1), ஷத்மான் இஸ்லாம் (10), நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (4), மொமினுல் ஹக் (1), முஷ்பிகுர் ரஹிம் (3), ஷாகிப் அல் ஹசன் (2) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், வங்கதேசம் அணி 26 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
ஆனால், அதன்பின் இணைந்த லிட்டன் தாஸ்-மெஹிதி ஹசன் அணி அட்டகாசமான இன்னிங்ஸை விளையாடினர். இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தனர். மெஹிதி ஹசன் 78 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய லிட்டன் தான் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார். மேலும், 138 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால், வங்கதேசம் அணி தனது முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 12 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ‘தேமே’ என விளையாடினர். நீங்க எப்படி போட்டாலும் நாங்க அடிக்க மாட்டோம் என கங்கனம் கட்டிக்கொண்டு விளையாடினர். அப்துல்லா ஷஃபிக் (3), குர்ரம் ஷஷாத் (0), சைம் அயூப் (20), ஷான் மசூத் (28), பாபர் அசாம் (11), சாத் ஷாகில் (2) ரன்களில் வெளியேற 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
அதிகப்பட்சமாக பந்துவீச்சாளர் சல்மான் அகா 47 ரன்களும், மொஹமது ரிஸ்வான் 43 ரன்களும் எடுத்தனர். இதனால், பாகிஸ்தான், 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளையும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் எளிதாக வெற்றிபெற்றது. அதிகப்பட்சமாக ஷாகிர் ஹசன் 40 ரன்களும், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 38 ரன்களும், மொமினுல் ஹக் 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி அசத்தல் வெற்றி பெற்றது
இதனால், வங்கதேசம் அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. மேலும், சேசிங்கில் 3ஆவது அதிகப்பட்ச ரன்களையும் வங்கதேசம் பதிவு செய்தது. இதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 215 ரன்களையும், 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 191 ரன்களையும் வெற்றிகரமாக இலக்கை துரத்தி பிடித்திருந்தது.
What's Your Reaction?