முருகனுக்கு அபிஷேகம் செய்தால் விஷம் அமிர்தமாக மாறும்.. அர்ஜூன் சம்பத் அதிரடி
பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில், ‘வரம்தரும் பாலமுருகன்’ ஆலயம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, “அண்மை காலமாக மதமாற்றம் அதிகரித்து வருகிறது. பட்டியலின மக்கள் குறிவைக்கப்பட்டு கல்வி, தொழிற்பயிற்சி கொடுப்பதாக கூறி மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். பட்டியலின மக்களை மதமாற்றுவதால் நமது குலதெய்வ வழிபாடு சீரழிந்து விடும்.
தமிழ்நாட்டில் சர்ச் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு பண உதவியுடன் ஆண்டுக்கு 1,600க்கும் மேற்பட்ட சர்ச் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 470க்கும் மேற்பட்ட மசூதிகள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் 100க்கும் குறைவான கோவில்கள் மட்டுமே கட்டப்படுகிறது.
ஏற்கனவே உள்ள கோவில்களையும் பராமரிக்க முடியாமல் உள்ளது. 42,000க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வகிக்கும் இந்துசமய அறநிலையத் துறை, திருப்பதி தேவஸ்தானம் அனைத்து இடங்களிலும் புதிய கோவில்களை கட்டுகிறது. அதுபோல, பழனி முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில் என அனைத்து பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களிலும் முருகன் கோவில்களை கட்டிட வேண்டும். அறநிலையத்துறை அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குலதெய்வம், குலத்தொழில், குலக்கல்வி அனைத்தும் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது. மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து 2 முதல் 3 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்கி அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் சிறந்த திட்டம் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா உட்பட நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து பாரம்பரிய தொழில் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது குலத்தொழில் என ஜாதி முத்திரை குத்தி மடைமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு நேரடியாக இந்த திட்டத்தை நேரடியாக செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் அனைவரும் இதில் பயனடையலாம். ஜாதிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஜாதி முத்திரை குத்துகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் இருந்தே மகன், பேரன் முதலமைச்சர் ஆக நியமிக்கப்படுவது குலத்தொழில் கிடையாது. ஆனால், சிற்பியின் மகன் சிற்பம் செய்தால் அது குலத்தொழிலா? தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுக, மற்றும் திக உள்நோக்கத்தோடு குலத்தொழில் என ஒடுக்க நினைப்பது இளைஞர்களின் நலனுக்கு எதிரானது. வானதியின் பேச்சு திரித்து வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுதி கொடுத்ததை தெரியாமல் உதயநிதி படித்து விட்டார். உதயநிதி வீட்டிலேயே பூஜை நடந்து வருகிறது. ஆனால் கிறிஸ்தவராக மாறிவிட்டதாக கூறுகிறார். முதலமைச்சராக வர போகிறவர், தற்போது துணை முதலமைச்சர் இது போல கூறலாமா? அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும். மீண்டும் உதயநிதி தாய் மதம் திரும்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் போதை பொருள் திமுகவினர் விற்பனை செய்வதாக அதிமுக கூறிய கருத்து உண்மை. போதை பொருள் கடத்தியதாக, கஞ்சா கடத்தியதாக, கள்ளச்சாராயம் வழக்கில் திமுகவினர் கைதாகி வருகிறார்கள். இதில் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாற வேண்டும்” என்றார்.
சர்க்கரையை தவிர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘இந்து சமயத்தில் கிருஷ்ணார்ப்பணம் என கூறி உட்கொள்வார்கள் எனவும், பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும்’ என்றார்.
What's Your Reaction?