'இந்தியாவில் விரைவில் பெரிய சம்பவம் இருக்கு'.. பரபரப்பை பற்ற வைத்த ஹிண்டன்பர்க்!
இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க். அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.

டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் பெரு நிறுவனங்களில் நடக்கும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு ஹிண்டன்பர்க்கின் பெயர் தெரிந்து இருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க்.
அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது ஹிண்டன்பர்க். ''அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் முறைகேடு செய்து பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன்கள் பெற்று வருகிறது.மேலும் போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றன'' என்று ஹிண்டன்பர்க் அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தது.
இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் அதானி குழும நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கெளதம் அதானியும் பணக்காரர்கள் பட்டியலில் சரிவை சந்தித்தார்.
அதே வேளையில் ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை முற்றிலும் தவறானது; உண்மைக்கு புறம்பானது என்று அதானி குழும நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இப்படி இந்தியா முழுவதும் பரிச்சயமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இப்போது மீண்டும் இந்தியர்கள் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளது. அதாவது ''இந்தியாவில் விரைவில் ஒரு சம்பவம் நடைபெற உள்ளது'' என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் 'எக்ஸ்' தளத்தில் கூறியுள்ளது. அது என்ன சம்பவம்? எப்போது நடைபெற போகிறது? என்ற விவரங்களை ஹிண்டன்பர்க் கூறவில்லை.
நிறுவனங்களின் பெரும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவதால், இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு பெரு நிறுவனமும் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்க உள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''பெரிய சம்பவம் என்று ஹிண்டன்பர்க் கூறியுள்ளதால் ஒருவேளை அம்பானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு சொல்ல போகிறதா? இல்லை அதானி குழும நிறுவனங்கள் மீது வேறு ஒரு பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைக்க போகிறதா?'' என்று நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஹிண்டன்பர்க்கின் பதிவால் இந்தியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?






