மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டின் டி.வி. சோமநாதன் ஐ.ஏ.எஸ். நியமனம்

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Aug 10, 2024 - 20:54
 0
மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டின் டி.வி. சோமநாதன் ஐ.ஏ.எஸ். நியமனம்
மத்திய அமைச்சரவை செயலாளராக டி.வி. சோமநாதன் நியமனம்

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், மத்திய அமைச்சரவை செயலராக டி.வி. சோமநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் இப்பதவியில் ஆகஸ்டு 30ஆம் தேதி முதல் 2 ஆண்டுகள் நீடிப்பார் எனவும் தெரிவித்து உள்ளது.

தற்போது, இந்திய நிதிச் செயலாளராக பணியாற்றி வரும், டி.வி.சோமநாதன், இதற்கு முன் பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராகவும், இணைச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். 1965ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி பிறந்த டி.வி. சோமநாதன் நிதி சார்ந்த பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான முனைவர் பட்டம் பெற்ற இவர், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாக மேம்பாட்டு திட்டத்திற்கான பட்டயப் படிப்பினையும் முடித்துள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் இளங்கலை வணிகவியல் பட்டங்கள் பெற்றவர். பொருளாதாரம், நிதி, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கை பற்றிய 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை கல்வி இதழ்களிலும், முன்னணி நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ளார்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது முதல்வரின் செயலாளராக பணியாற்றிய டி.வி.சோமநாதன், தமிழக அரசின் துணைச் செயலாளர் இணை விஜிலென்ஸ் ஆணையராகவும், மெட்ரோ நீர் நிர்வாக இயக்குநராகவும், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow