பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி.. பிரபல பாப் பாடகியின் இசை நிகழ்ச்சி ரத்து!

கைது செய்யப்பட்ட இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Aug 8, 2024 - 12:56
 0
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி.. பிரபல பாப் பாடகியின் இசை நிகழ்ச்சி ரத்து!
Pop Singer Taylor Swift Concert Canceled

வியன்னா: அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift). பாப் பாடகியான இவர் ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். இவருடைய ஆல்பங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

டெய்லர் ஸ்விஃப்ட் பல்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அந்த வகையில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஆகஸ்ட் 8ம் தேதி (இன்று), 9ம் தேதி (நாளை) மற்றும் 10ம் தேதி (நாளை மறுநாள்) ஆகிய 3 நாட்கள் டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சி நடக்க இருந்தது. 

வியன்னாவின் எர்ன்ஸ்ட் ஹாப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 65,000க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், வியன்னாவில் டெய்லர் ஸ்விஃப்ட் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இசை நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் பயங்கரவாத நடக்க உள்ளது என்று போலீசாருக்கு தகவல் வந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று (7ம் தேதி) 19 வயது இளைஞர் உள்பட 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அவர்கள் இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக, 19 வயது இளைஞர் உள்பட 2 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வியன்னாவில் உள்ள வீட்டில் தனது தாயுடன் தனியாக தங்கி இருக்கும் 19 வயது இளைஞர், வீட்டில் இருந்தபடி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

''பிடிபட்ட 2 பேரும் டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சி பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய கேட்டுக் கொண்டோம். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்று ஆஸ்திரிய பாதுகாப்புத் துறை டிஜிபி ஃபிரான்ஸ் ரூஃப் தெரிவித்துள்ளார்.

''டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த  எர்ன்ஸ்ட் ஹாப்பல் ஸ்டேடியத்தில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அரசிடம் இருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு காரணமாக இசை நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம். முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் திருப்பி அளிக்கப்படும்'' என்று  இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow