அதிமுக ஒருங்கிணையுமா? நெருக்கடி கொடுக்கும் பெருந்தலைகள்.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று மாஜி அமைச்சர்களும்,பெருந்தலைகளும் எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்ல தொடங்கிவிட்டனராம். ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்களோ அவர்களே இப்போது அதிமுகவை ஒருங்கிணைத்தால் மட்டுமே 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று கூறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Jul 12, 2024 - 10:40
 0
அதிமுக ஒருங்கிணையுமா? நெருக்கடி கொடுக்கும் பெருந்தலைகள்.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி
Edappadi Palanisamy vs Sasikala

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் ஆனார். ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. தொடர் தோல்விகள் அதிமுக தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக கூறினாலும் தொண்டர்கள் யாரும் வாக்குப்பதிவை புறக்கணிக்கவில்லை. பதிவான வாக்குகளே இதற்கு சாட்சியாகும். இதுவே எடப்பாடி பழனிச்சாமியை அப்செட் ஆக்கியுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.அவரது மனச்சாட்சியாக பேசி வருகிறார் ஜெயக்குமார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கோ, சசிகலாவிற்கோ இடமில்லை என்று உறுதியாக கூறி விட்டார் ஜெயக்குமார். 

ஓ.பன்னீர்செல்வமோ அதிமுகவில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசி வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய போது இறுக்கமான சூழ்நிலையிலேயே இருந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குக் காரணம் சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்தான். 

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு பேசிய போது,ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்ப்பதன் மூலம் கட்சி வலுப்பெற வாய்ப்புள்ளதாக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பில்லை என்று கூறிவிட்டாராம்.

இந்த சூழ்நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள சில முன்னாள் அமைச்சர்கள், சசிகலாவை விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென் மாவட்டத்தில் உள்ள மாஜி அமைச்சரரும் விரைவில் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் கலகக்குரல் வெடிக்கும் என்கின்றனர்.


எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் கீழ் பணியாற்றிய நிர்வாகிகளும் மாஜி அமைச்சர்களுமே அவருக்கு எதிராக திரும்பி உள்ளதால் கட்சி அவரது கையை விட்டு சென்று விடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  10 மாவட்ட செயலாளர்கள், 25+ எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனராம். கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிமுகவில் மீண்டும் கலகக் குரல் எழத்தொடங்கியுள்ளது. எம்ஜிஆர் மாளிகையில் என்ன நடக்கப்போகிறது என்று அதிமுக தொண்டர்கள் திகிலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow