அரசியல்

'வாஜ்பாய் என்னை மகனாக பார்த்தார்'.. திடீரென புகழ்ந்து தள்ளிய ஆ.ராசா!

DMK MP Andimuthu Raja on Vajpayee : ''நான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயோடு பல காலம் ஒன்றாக இருந்தேன். அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளேன். வாஜ்பாயுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டுள்ளேன்'' என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

'வாஜ்பாய் என்னை மகனாக பார்த்தார்'.. திடீரென புகழ்ந்து தள்ளிய ஆ.ராசா!
A.Raza Praised Vajpayee

DMK MP Andimuthu Raja on Vajpayee : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ், தமிழ்நாடு என்ற பெயரை கூட உச்சரிக்காததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பட்ஜெட்டில் தமிழ்­நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் திமுக சார்பில்  அனைத்து மாவட்டத் தலை­நக­ரங்­க­ளிலும் இன்று கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சிறப்பு உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்.

அப்போது பேசிய ஆ.ராசா, ''25 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான், மோடியை போன்று மோசமான ஒரு பிரதமரை பார்த்ததில்லை. வாஜ்பாய் பிரமராக இருந்தபோது, மக்களவை தேர்தலில் போதிய இடம் கிடைக்காமல் பிற கட்சிகளின் ஆதரவோடு  ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் வந்தது. 
வாஜ்பாய்க்கு ஆதரவு தர முன்வந்த ஜெயலலிதா, ''நாங்கள் ஆதரவு தர வேண்டும் என்றால் கலைஞர் கருணாநிதி ஆட்சியை நீங்கள் கலைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். 

ஆனால் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அதை செய்யவில்லை. ஒருவேளை இதே இடத்தில் மோடி பிரமராக இருந்திருந்தால் உடனே அதை செய்திருப்பார். நான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயோடு பல காலம் ஒன்றாக இருந்தேன். அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளேன். வாஜ்பாயுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டுள்ளேன். அவர் என்னை அவரது மகனாக பார்த்தார். அப்படிப்பட்ட ஒரு மகத்தான மனிதர் அமர்ந்த நாற்காலியில், மோடி போன்ற ஒரு முகத்தை பார்க்க முடியவில்லை'' என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். 

இன்று நடக்கும் போராட்டம் டெல்லியில் இருக்கக்கூடியவர்கள் காதுகளில் கேட்டு, மத்திய அரசின் அடிதளத்தை அசைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறிய கனிமொழி, தொடர்ந்து ஆட்சி நடத்த ஆதரவு தர வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். 

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்ட போர் குணத்தை யாராலும் மாற்ற முடியாது என்று தெரிவித்த கனிமொழி, எந்த நிதி நெருக்கடி வந்தாலும் அனைத்து திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார் என்று பாராட்டினார். பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அம்பானி, அதானி போன்ற பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே பட்ஜெட் பயனாக இருக்கும் என்று கனிமொழி பேசி முடித்தார்.