Niti Aayog Chairman On Mamata Banerjee : டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாச்சார மைய மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் 9வது நிதி ஆயோக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்களது மாநிலம் புறக்கணிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு உள்ளிட்ட 10 மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் 'வளர்ந்த பாரதம் 2024' என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த மமதா பானர்ஜி, ''பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். கூடுதல் நேரம் பேச விரும்பியபோது என்னை பேச விடாமல் எனது மைக் இணைப்பை துண்டித்தனர்.
ஆனால் சந்திரபாபு நாயுடு பேச 20 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் அசாம், கோவா, சத்தீஷ்கர் ஆகிய மாநில முதல்வர்களும் பேசுவதற்கு 10 மற்றும் 12 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 10-20 நிமிடங்கள் மட்டுமே நான் கூட்டத்தில் பங்கேற்றேன்'' என்று கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ''ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது? மத்திய அரசு அனைத்து மாநில முதல்வர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு நிதி ஆயோக் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர் சுப்பிரமணியம், ''நிதி ஆயோக் கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, பீகார், டெல்லி, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களை தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உணவு இடைவேளைக்கு முன்பாக தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி கேட்டார். அனால் அகர வரிசைப்படி ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் என்ற முறையில் மாநில முதல்வர்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், மமதா பானர்ஜி வேண்டுகோளுக்கு இணங்க குஜராத் மாநில முதல்வருக்கு முன்பாக அவர் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் 7 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு முதலமைச்சருக்கும் ஏழு நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி அவரது கருத்துக்களை கூறினார். அனைவரும் அதை கேட்டோம். அதனை நோட் செய்து கொண்டோம். மமதா பானர்ஜி கூட்டத்தின் தொடக்கத்திலேயே மாநில சட்டப்பேரவை கூட்ட தொடரில் கலந்து கொள்ள செல்ல இருப்பதாக எங்களிடம் தெரிவித்தார். அதன்படி அவர் கொல்கத்தா செல்வதற்காக விமானம் பிடிக்கச் சென்றார்'' என்று பி.வி.ஆர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.