வி*** எனக்கு.. ம** உனக்கு.. மாண்புமிகுவிடம் பேரம் பேசிய மாஜி? தேர்தலுக்கு முன்பே தொகுதி பிரிப்பு?
இலைக்கட்சி மாஜியும், சிட்டிங் அமைச்சரும் ரகசியமாக சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக ரகசிய டீலிங் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விழுப்புரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கு தெரியாமல் மாஜியும், மாண்புமிகுவும் போட்டிருக்கும் டீலிங் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பொதுவெளியில் எலியும் பூனையுமாய் இருக்கும் மாஜியும், சிட்டிங் அமைச்சரும், இந்த தொகுதியை எனக்கு விட்டுக்கொடு, அந்த தொகுதியை நான் உனக்கு விட்டுக்கொடுக்கிறேன் என ரகசிய டீலிங் பேசுவதாக வரும் தகவல்கள்தான் சென்னை அருகே உள்ள வட மாவட்டத்தின் ஹைலைட்!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வட மாவட்டத்தை சேந்த அந்த கண் சிவக்க பேசும் மாஜியும், பொன்னான சிட்டிங்கும் தேர்தல் கணக்கை இப்போதே தொடங்கிவிட்டார்கள் என சொல்கின்றனர் ர.ர-க்களும், உ.பி-க்களும்.
அமைச்சராக இருந்த போதும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் சிட்டிங் தொகுதியில் மூன்றாவது முறையாக சோபிக்க முடியாது என தெரிந்ததால் தொகுதி மாறி போட்டியிட திட்டமிட்டார் அந்த கண் சிவக்கும் மாஜி. ஆனால் முன் வைத்த காலை பின் வைத்து விட்டால் கௌரவம் என்னவாது, மானம் என்னாவது என்று சிலர் உசுப்பி விட வேறு வழியில்லாமல், சிட்டிங் தொகுதியிலேயே போட்டியிட்டு தோல்வியை தழுவினார் அந்த மாஜி.
இது இப்படி இருக்க, இன்னொரு பக்கம் வாயால் பல வம்புகளை வாங்கி, கட்சியிலும், தொகுதியிலும் செல்வாக்கை இழந்தவர் தான் அந்த பொன்னான மான்புமிகு. இவர் வாங்கிய வம்புகளால் அடுத்த தேர்தலில் இவருக்கு சீட் வழங்கலாமா? வேண்டாமா? என கட்சியே யோசித்து வரும் நிலையில், ’எனக்கு இல்லன்னா கூட பரவாயில்லாங்கையா.. மாவட்ட செயலாளரா இருக்க என் மகனுக்கு அந்த சீட்ட கொடுக்க’ என ஓயாமல் அறிவாலயத்தின் வாயில் கதவை அவர் தட்டிக்கொண்டிருக்கிறாராம்.
இந்த நிலையில் தான், 2026ல் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என கணக்குப் போட்டிருக்கும் அந்த மாஜி அமைச்சர், தனது சொந்த ஊர் அமைந்துள்ள தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்துள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அந்த மயிலான தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மாம்பழ கட்சி 45.79 சதவீத வாங்குகளை பெற்றிருந்தது. இதனால் இம்முறை அந்த தொகுதியில் அதிமுக போட்டியிடும் பட்சத்தில் திமுகவிற்கு அந்த வாக்குகள் செல்லாமல் அதை அப்படியே தக்கவைக்க வேண்டும் என அவர் எண்ணியுள்ளார். ஆனால், கண்சிவக்கும் மாஜியும், பொன்னான அமைச்சரின் மகனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி என்பது மதில் மேல் பூனை போல ஆகிவிடுமே என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்காக மாவட்டத்தின் சிட்டிங் அமைச்சரை, ரகசியமாக சந்தித்த மாஜி டீலிங் ஒன்றை பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இருவரும் இணைந்து, ’மாண்புமிகுவாகிய நான் விழுப்புரம் தொகுதிய எடுத்துக்குறேன், மாஜி ஆகிய நீ மயிலம் தொகுதியை எடுத்துக்கோ, இரண்டுபேரும் சோபிக்கலாம்’ என பலே திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக ர.ர-க்களும், உ.பி-க்களும் முணுமுணுக்கின்றனர்.
இந்த ரகசிய டீலிங் மூலம், ’ஒரே தொகுதியில் நிற்க வேண்டாம்’ என்ற உடன்படிக்கை எட்டிவிட்டதாகவும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.
இந்நிலையில், தலைமைக்கு தெரியாமல் மாஜியும், மாண்புமிகுவும் போட்டுள்ளதாக கூறப்படும் இந்த ரகசிய டீலிங் தொகுதியில் என்னமாதிரியான ரிசல்ட்டை கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
What's Your Reaction?






