தவெக வீரவாளில் அடங்கியுள்ள பாரம்பரியம்... இத்தனை சிறப்புகளா?
மாநாட்டில் விஜய் கையில் கொடுக்கப்பட்டது சோழர் காலத்து வடிவிலான வீரவாள் எனவும், அதில் வெள்ளி முலாம் பூசப்பட்டு ஐம்பொன்னால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த வாளை வடிவமைத்து கொடுத்த சுவாமிமலை சிற்பக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் கடந்த 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழக முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் யானை சின்னம் பொரிக்கப்பட்ட வீர வாளை பரிசாக வழங்கினார். அந்த வாளை விஜய் தூக்கி காண்பித்தபோது தொண்டர்கள் அனைவரும் பலத்த ஆரவாரம் செய்தனர். அந்த வீரவாளின் கைப்பிடியில் யாழியின் உருவமும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானையின் உருவமும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தேசிய விருது பெற்ற தேவ சேனாதிபதி சிற்பக்கலைக்கூடத்தில் இருந்து அந்த வீரவாள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வாளை வடிவமைத் சிற்பக் கலைஞர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் சதாசிவம் ஆகியோர் தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளனர். அதில், ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நாங்கள் தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்காக வந்த குடும்பம். தலைமுறை தலைமுறையாக இந்த சிற்பக்கலை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். என்னுடைய தந்தை 1972ம் ஆண்டு கலைஞருக்கு மனு நீதி சோழன் சிலையை செய்து கொடுத்தார். அதேபோல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வீட்டில் பூஜை சுவாமி விக்ரகங்கள் அனைத்தும் என்னுடைய தந்தைதான் செய்து கொடுத்தார். நான் ஜெயலலிதாவுக்கு கத்தி மற்றும் கேடயம் செய்து கொடுத்தேன். அதேபோல் தற்போதைய முதலமைச்சருக்கு செங்கோல் செய்து கொடுத்தேன். கட்சி பாகுபாடு இன்றி சிற்பத் தொழிலுக்கான மரியாதையை கொடுத்தார்கள். அதற்காக நாங்கள் செய்து கொடுத்து வருகிறோம். தற்போது என்னுடைய மகன் நடிகர் விஜய்க்கு வீரவாள் செய்து கொடுத்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சிற்ப கலைஞர் சதாசிவம், “பாரம்பரிய முறையில் வாள் செய்து கொடுக்கும்படி கேட்டனர். குறைந்த கால அவகாசமே கொடுத்தனர். இருந்தும் மூன்று நாட்களுக்குள் சோழர் காலத்து முறையில் பஞ்சலோகத்தில் வாள் செய்து அதில் வெள்ளி முலாம் பூசினோம். மேலும், அதில் அவர்களின் கட்சி கொடியில் பொறிக்கப்பட்டுள்ள யானை உருவத்தை வாளின் கைப்பிடியில் யாழியுடன் சேர்த்து வடிவமைத்தோம். கடந்த 2010 ஆம் ஆண்டு ஆருத்ரா என்ற திரைப்படத்திற்காக விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் தங்களுடைய சிற்பக்கூடத்தில் எங்களது தாத்தா போன்று வேடம் அணிந்து சிற்பக் கலைஞர் போல் நடித்தார். அவரைப் பார்க்கும்போது எங்கள் தாத்தாவை பார்ப்பது போலவே இருந்தது. ஒரு வாரம் எங்களுடனே தங்கி இருந்து நாங்கள் வேலை செய்வதை பார்த்து, இந்தப் படத்தில் நடித்தார். தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள அவருடைய மகனுக்கு எங்களது சிற்பக்கூடத்தில் இருந்து வீரவாள் செய்து கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாநாட்டு மேடையில் நாங்கள் செய்து கொடுத்த வாள் விஜய் கையில் சென்று, அதனை அவர் தூக்கி காண்பித்தபோது பல லட்சம் மக்கள் ஆரவாரம் செய்ததை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.இதற்காகத்தான் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம். முதல்முறையாக கட்சி தொடங்கி சுவாமிமலையில் செய்து கொடுக்கப்பட்ட வாளில் இருந்து அவர் தொடங்கியிருப்பது எங்கள் சிற்பக்கூடத்திற்கும், சுவாமிமலைக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதுகிறோம்” என்றார்.
What's Your Reaction?