"தம்பீ வா.. தலைமையேற்க வா.." உதயநிதி பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“ஒருநாள்
கலைஞரும் நானும்
கோபாலபுரத்தில்
உரையாடிக்கொண்டிருந்தோம்
உதயநிதி தன் மனைவி
கிருத்திகாவோடு வந்தார்;
நின்றுகொண்டே பேசினார்
கலைஞர் மறுத்த ஒருகருத்தை
தன் வாதத்தை முன்னிறுத்திச்
சாதித்துச் சென்றார்
அப்போதே
தெரிந்துகொண்டேன்
வலிவும் தெளிவும் மிக்க
வல்லவர் இவரென்று
உதயநிதி
பேரீச்சம் பழம்போல்
மென்மையானவர்; ஆனால்
அதன் விதையைப்போல்
உறுதியானவர்
சின்னச் சின்ன எதிர்ப்புகள்
இவரைச் சிதைப்பதில்லை
குன்றிமணி முட்டிக்
குன்றுகள் சாய்வதில்லை
காலம் இவரை
மேலும் மேலும்
செதுக்கும்; புதுக்கும்
“தம்பீ வா
தலைமையேற்க வா”
அண்ணாவிடம் கடன்வாங்கி
அண்ணன் வாழ்த்துகிறேன்” என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன்” என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
“தமிழ்நாடு துணை முதல்வரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்” என கனிமொழி எம்பி வாழ்த்தியுள்ளார்.
"திராவிட கொள்கைச் சூரியன்!!
மாண்புமிகு துணை முதலமைச்சர்!!
எங்கள் இளந்தலைவர்!!
கழக இளைஞரணிச் செயலாளர்!!
உதயநிதி ஸ்டாலினுக்கு அகவைதின நல்வாழ்த்துகள்” என அமைச்சர் சேகர் பாபு வாழ்த்தியுள்ளார்.
“இன்று பிறந்தநாள்
காணும் துணை முதலமைச்சர்
அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
'திராவிடம், தமிழ்த்தேசியம் வேறு வேறு அல்ல; திராவிடம் தமிழ்த் தேசியத்தின் வேர் ' என்பதை நிலைநாட்ட,
இன்று தங்களின் பங்களிப்பு காலத்தின் தேவையாகி் உள்ளது.
கலைஞரின் கருத்தியல் பெயரனாய்க் களமாட, ஊடுருவும் சனாதனப் பகை வெல்ல உளங்கனிந்த நல்வாழ்த்துகள்” என விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.
What's Your Reaction?