டீலர்கள் வைத்து போதைப்பொருள் கடத்தல்.. சகோதரர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 19-ஆம் தேதி போதைப்பொருள் கடத்தல் டீலர் சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ஒரு கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு விற்பனை செய்த மகாதேவன் என்ற நபரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சீனிவாசன் மற்றும் மகாதேவன் ஆகியோர் மட்டுமல்லாமல் சென்னையில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் டீலர்களுக்கு மெத் உள்ளிட்ட போதைப்பொருள்களை மொத்தமாக விற்பனை செய்து வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜெய்னுலாப்தீன் மற்றும் அவரது சகோதரர் முகமது ரமால் ஆகியோரை தெற்கு மண்டல தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட மெத் போதைப்பொருளை சென்னையில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இவர்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தெற்கு மண்டல தனிப்படை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஜெயினுலாப்தின் மற்றும் அவரது சகோதரர் முஹம்மது ரமால் ஆகியோர் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உணவகங்கள் மற்றும் விடுதிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தகக்து.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதைப்பொருட்கள் பள்ளி, கல்லூரிகள் அருகில் மிகவும் எளிதாக கிடைப்பதால் மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை முறையாக செயல்படுத்தாததால் போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்த விற்பனையில் அரசியல் கட்சி தலைவர்கள், காவல்துறையினர் ஆகியோரின் தலையீடு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதால் சமூக சீர்க்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
What's Your Reaction?