மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. FIR-ல் உள்ள அதிர்ச்சி தகவல்..!
மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை கைது செய்த காவல்துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் சுரேஷ், கார்த்திக், 12 ஆம் வகுப்பு மாணவர், மணி என்ற சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியின் பெண் தோழி உள்பட 4 பேர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தான் முதலில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் குறித்து மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது
தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கு எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. எழும்பூர் மகளிர் போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தந்தை சரக்கு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மாணவியின் தாய் இறந்து விட்டதால் தந்தை வளர்த்து வந்தார்.
கல்லூரி மாணவிக்கு 40 சதவீதம் மனவளர்ச்சி குன்றியதாக சான்றிதழ் பெற்று அவரது தந்தை கல்லூரியில் சேர்த்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதனால் தந்தை தனது மகளை ஆட்டோ மூலம் கல்லூரிக்கு அனுப்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கல்லூரி முடிந்ததும் மீண்டும் ஆட்டோவிலேயே வீட்டிற்கு வருவது வழக்கம். கல்லூரிக்கு செல்போன் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 4 ஆம் தேதி வீட்டிற்கு கல்லூரி மாணவி காலதாமதமாக வந்ததால் சந்தேகமடைந்த தந்தை அவரிடம் விசாரித்த போது தான், கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கல்லூரி மாணவியுடன் படிக்கும் தோழி ஒருவர் அரக்கோணத்தில் இருந்து ரயிலில் கல்லூரிக்கு வந்துள்ளார். அந்த பெண் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் சுரேஷ், கார்த்திக், மணி 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஆகியோரை பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து ஸ்பென்சர் பிளாசாவிற்கு மனவளர்ச்சி குன்றிய மாணவியை அனைவரும் அழைத்து சென்றுள்ளனர். பிறகு மாணவியின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்னாப் சாட் மூலம் பேசி பழகி வந்த நிலையில் சுரேஷ் காதலிப்பதாக கூறி பழகி வந்ததாக தெரிகிறது.
கடந்த 4ம் தேதி எனது மகளை கல்லூரியில் இருந்து அழைத்து சென்று சென்ட்ரல் அருகே ஏதோ ஒரு லாட்ஜிற்கு அழைத்து சென்று ரூம் எடுத்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை எச்சரித்து அனுப்பும்படி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கேட்டு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் விசாரித்த போது தான் 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.
மாணவியை கல்லூரிக்கு செல்லவிடாமல் இவர்கள் லாட்ஜிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






