பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்.. இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்
பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் சென்னை போக்குவரத்து காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் பாலியல் வழக்கில் சிக்கி நடவடிக்கைக்கு உள்ளான காவலர்கள் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை இருக்கின்றனர். அந்த வரிசையில் சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மகேஷ் குமாரும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வருபவர் மகேஷ் குமார். இவர் மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் கொடுத்துள்ளார். சமூக வலைதளம் மூலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாவும், பரிசு பொருட்கள் கொடுத்ததாகவும் கூறி புகார் அளித்ததாக தெரிகிறது.
அந்த ஆதாரங்களோடு பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகார், விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாகா கமிட்டியில் இடம் பெற்றுள்ள டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மகேஷ் குமார் மேலும் ஒரு பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணிபுரியும் இடத்திற்கு சென்று பெண் காவலர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் இரண்டு பேருக்கும் தொடர்ந்து இரவுப்பணி கொடுத்துடன் பணிபுரியும் இடத்திற்கு சென்று மகேஷ்குமார் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால், மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது. சஸ்பெண்டான மகேஷ் குமார் 1999-ஆம் ஆண்டு டிஎஸ்பியாக (குரூப் 1) காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்.
தென்காசியை சொந்த ஊராக கொண்ட இவர் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது தான் ஐபிஎஸ் அதிகாரியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. 2024-ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றலாக வந்தார். சமீபத்தில் தான் சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






