'இனி அமைதியாக இருக்க மாட்டோம்'.. பொதுக்குழு கூட்டத்தில் நாசர் ஆவேசம்.. என்ன விஷயம்?

''நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு பல முன்னணி நடிகர்கள் வரவில்லை என்கிறார்கள். அவர்கள் கலை நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நிதி திரட்ட உதவுகிறார்கள்'' என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.

Sep 8, 2024 - 14:59
Sep 9, 2024 - 10:56
 0
'இனி அமைதியாக இருக்க மாட்டோம்'.. பொதுக்குழு கூட்டத்தில் நாசர் ஆவேசம்.. என்ன விஷயம்?
Actor Nassar

சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, கருணாஸ் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் விஷால், சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்பு நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிலையில், மொத்தம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், புதிய கட்டடத்துக்காக ஒரு கோடி நிதி வழங்கிய விஜய்க்கு, தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதேபோல் நடிகர் சங்க கட்டடத்தை கட்ட தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்  வழங்கியும், 5 கோடி ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி  தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சங்க கட்டட வளர்ச்சிக்கு 25 கோடி வங்கி கடன் வாங்கிய வகையில், அதற்கு பிணைத் தொகை வழங்கிய கமல், கார்த்தி, உதயநிதி, சிவகார்த்திகேயன், நெப்போலியன், தனுசுக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மிக முக்கியமாக, நடிகர் சங்க கட்டட பணிகளை தொடரும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கங்களின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மூத்த நடிகர்கள் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலரும் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறுகையில், ''நடிகர் சங்க பொதுக்குழு மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுக்குழுவுக்கு பல முன்னணி நடிகர்கள் வரவில்லை என் கிறார்கள். அவர்கள் கலை நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நிதி திரட்ட உதவுகிறார்கள். பொதுக்குழு விருது கொடுக்க உதவியவர் யோகிபாபுதான்.

பாலியல் புகார்கள் தொடர்பாக இனி நடிகர் சங்கம் அமைதியாக இருக்காது. பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக இன்னும் தீவிரமாக இருப்போம்.  சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்போம். நாங்கள் விரைவில் நடிகர் சங்க கட்டட பணிகளை முடிப்போம். மீண்டும் இதே நிர்வாகம் தேர்தல் இல்லாமல் தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழுக்கு நன்றி'' என்றார். 

முன்னதாக நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய பழம்பெரும் நடிகை விஜயகுமாரி, ''முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. உங்க அப்பா கலைஞர் எனக்கு கண்ணகி வேடம் கொடுத்தார்கள்..நீங்க நடிகர் சங்க கட்டடம் கட்ட உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow