நடிகர் சங்கத்துக்காக இணைந்து நடிக்கும் ரஜினி, கமல்... 'அந்த ஒரு கோடி' விஜய்க்கு நன்றி தீர்மானம்!

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக நடிகர் சங்க கடனை அடைக்க ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Sep 8, 2024 - 13:52
Sep 9, 2024 - 10:57
 0
நடிகர் சங்கத்துக்காக இணைந்து நடிக்கும் ரஜினி, கமல்... 'அந்த ஒரு கோடி' விஜய்க்கு நன்றி தீர்மானம்!
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

சென்னை: 68வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, கருணாஸ் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், போண்டா மணி, சேசு உட்பட 60 உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பேனர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து, காமராஜர் அரங்கிற்கு சைக்கிளில் வந்தார் விஷால். உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் சைக்கிளில் வந்ததாக விஷால் கூறியிருந்தார். 

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து உறுப்பினர்கள் குத்து விளக்கேற்ற பொதுச்செயலாளர் விஷால் உரை நிகழ்த்தி பொதுக்குழுவை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மொத்தம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், புதிய கட்டடத்துக்காக ஒரு கோடி நிதி வழங்கிய விஜய்க்கு, தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர் சங்க கட்டடத்துக்காக 1 கோடி ரூபாய் நிதி வழங்கியது விஜய் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல், நடிகர் சங்க கட்டடத்தை மீண்டும் தொடர அமைச்சர் உதயநிதி தன் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மேலும் 5 கோடி ரூபாய் பரிந்துரை செய்தும் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய துணைத் தலைவர் கருணாஸ், சங்க கட்டடத்துக்காக கடன் வாங்கும் போது, டெபாசிட் கொடுக்க பெரும் தொகையை அமைச்சர் உதயநிதி ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், அமைச்சர் உதயநிதி முன்னெடுப்பால்தான் நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சங்க கட்டட வளர்ச்சிக்கு 25 கோடி வங்கி கடன் வாங்கிய வகையில், அதற்கு பிணைத் தொகை வழங்கிய கமல், கார்த்தி, உதயநிதி, சிவகார்த்திகேயன், நெப்போலியன், தனுசுக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் நடிகர் சங்க பணிகள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்க கடனை அடைக்க கலை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாகவும், அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும் பொருளாளர் கார்த்தி தெரிவித்தார். முக்கியமாக இந்த கலை நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் இணைந்து நாடகம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கார்த்தி கூறியுள்ளார். 

மேலும் படிக்க - தவெக அரசியல் கட்சியாக அங்கீகாரம்... மாநாடு தேதியை அறிவிக்காத விஜய்..?
  
அதேபோல், வங்கியில் கடன் வாங்கி சங்கத்தின் கட்டடம் கட்டப்பட்டு வருவதால், நிதிநிலையை கருத்தில் கொண்டு, தேர்தலுக்கு வீண் செலவு வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதே நிர்வாகம் தேர்தல் இல்லாமல் அடுத்த முறையும் தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு பொதுக்குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளும் நடிகர் சங்கத் தலைவராக நாசரும் செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தியும் பொறுப்பு வகிப்பார்கள். இந்நிகழ்ச்சியில், டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் முகம் பொரிக்கப்பட்ட தங்க டாலரும் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருணாஸ், நடிகர் சங்க மூத்த உறுப்பினர்கள், நலிந்த நடிகர்கள் நலனுக்காக, திண்டுக்கல்லில் 5 ஏக்கர் இடம் அளிப்பதாக உறுதியளித்தார். 

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நடிகைகள் திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow