Kamal Haasan: சர்ச்சைகளை சல்லடையாக்கிய உலகநாயகன்... கமல்ஹாசனும் அவர் மீண்டு வந்த சிக்கல்களும்!
திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன், சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். இவைகளில் கமலுக்கு கிடைத்த வெற்றிகளை விட, அவரை சுற்றிய சர்ச்சைகள் தான் அதிகம். கமலை சுற்றிய சர்ச்சைகளும், அதிலிருந்து அவர் மீண்டு வந்ததையும் இப்போது பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான கமல்ஹாசன், இன்று சினிமா கனவோடு வலம் வரும் அனைவருக்கும் யூனிவர்ஸிட்டியாக திகழ்கிறார். கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே பல புதிய முயற்சிகளை துணிச்சலாக மேற்கொண்டது அவராக தான் இருக்க முடியும். அதனால் கமல்ஹாசனை சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சமே கிடையாது. சிறுவயது முதலே தன்னை கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்திக் கொண்ட கமல், அதுகுறித்து அதிரடியாக பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதேபோல், திருமண வாழ்க்கை, கெளதமியுடன் ரிலேஷன்ஷிப், என தனிப்பட்ட வாழ்க்கையிலும் கமல் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். ஆனால், அவைகளையெல்லாம் ‘Just like that’ என, தனது சட்டை காலரில் விழுந்த தூசியைப் போல தட்டிவிட்டுச் சென்றார்.
அதேநேரம் கமலின் சினிமா கரியரில், அவர் ஹீரோவாக நடித்து 1992ல் வெளியான தேவர் மகன் திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையானது. சாதி, மத மறுப்பு குறித்து மூச்சு விடாமல் பேசும் கமல், தேவர் மகன் படத்தில் குறிப்பிட்ட சாதியின் பெருமையை பேசியதாக கடும் விமர்சனம் எழுந்தது. முக்கியமாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக, சமீபத்தில் கமல்ஹாசனே மன்னிப்பும் கேட்டார். அதேபோல், கமல் இயக்கி நடித்த ஹேராம் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியது. தன்னை காந்தியவாதியாக பிரகடனப்படுத்தி வரும் கமல், காத்தியை கொலை செய்த கோட்சேவின் கொள்கைகளை ஆதரிக்கும் விதமாக ஹேராம் படத்தை இயக்கியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், 2004ம் ஆண்டு விருமாண்டி படத்தின் ரிலீஸின் போதும் கமலுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதாவது விருமாண்டி படத்துக்கு கமல் முதலில் வைத்திருந்த டைட்டில் சண்டியர். அதுவே இப்படத்தின் ரிலீஸுக்கு பிரச்சினையாக, இறுதியில் ‘விருமாண்டி’ என்ற பெயரில் வெளியானது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அழுத்தம் காரணமாக, வேறு வழியே இல்லாமல் சண்டியர் என்ற டைட்டிலை விருமாண்டியாக மாற்றினார் கமல். அதேபோல், விஸ்வரூபம் படத்தின் ரிலீஸின் போதும் கமலுக்கு பிரச்சினை தான். விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தான் – தாலிபான்கள், இஸ்லாமிய தீவிரவாதம் என கமல் பாடம் எடுக்க, அது இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது.
இதனால் விஸ்வரூபம் படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் விரக்தியின் உச்சத்துக்கே சென்றார் கமல். ஒருகட்டத்தில் விஸ்வரூபம் வெளியாகவில்லை என்றால், நாட்டை விட்டே வெளியேறுவேன் அதிரடியாக அறிவித்தார். ஆனாலும் ஒருவழியாக விஸ்வரூபம் படம் வெளியானது. அதேபோல், உத்தமவில்லன் படத்தில் இந்துகளின் மனதை புண்படுத்தியதாக சில இந்து அமைப்புகள் கமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இறுதியாக தடைகளை கடந்து ரிலீஸான உத்தம வில்லன் எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை. 2022ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலில், “ஒன்றியத்தின் தப்பாலே... ஒன்னியும் இல்ல இப்பாலே” என எழுதி மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார்.
அதேபோல், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், ஆரம்பத்தில் அந்நிகழ்ச்சியின் அடையாளமாக காணப்பட்டார். ஆனால், கடந்த 2 சீசன்களில் கமல்ஹாசன் மீது அதிகமான விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பிரதீப் ஆண்டனிக்கு ரெ கார்டு கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கமல்ஹாசனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இதனால் தான் இந்த சீசனை கமல் தொகுத்து வழங்கவில்லை என சொல்லப்படுகிறது. சினிமா மட்டும் இல்லாமல் அரசியலிலும் களமிறங்கிய கமல்ஹாசன், ஆரம்பத்தில் திமுகவிற்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்த நிலையில், இப்போது திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?