சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம், ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியிருந்தது தங்கலான். எப்போதும் வடசென்னையை சுற்றியே கதைக்களத்தை அமைக்கும் பா ரஞ்சித், இந்த முறை ரசிகர்களுக்கு ஃபேண்டஸியான ட்ரீட் கொடுத்திருந்தார்.
கோலார் சுரங்கத்தில் தங்கம் எடுப்பதற்காக அடிமையாக்கப்பட்ட பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட பொருளாதார சுரண்டலை, ரத்தமும் சதையுமாக படமாக்கியிருந்தார் பா ரஞ்சித். ரசிகர்களுக்கு புதுவிதமான மாய உலகத்தை கண் முன் காட்டிய பா ரஞ்சித், மேக்கிங்கிலும் ரசிகர்களுக்கு புது அனுபவம் கொடுத்திருந்தார். இதுவே தங்கலான் படத்துக்கு பாசிட்டிவாக அமைந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் பா ரஞ்சித்தின் இந்த புதிய முயற்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
அதேநேரம் தங்கலான் படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பு ரசிகர்களிடம் பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. தங்கலான் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என பா ரஞ்சித்தும் விக்ரமும் தெரிவித்திருந்தனர். இதனால் விரைவில் தங்கலான் 2ம் பாகம் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 6வது நாள் ரிப்போர்ட்
அதன்படி, விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான தங்கலான், அடுத்த வாரம் செப்.20ம் தேதி ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தை பார்க்க ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்கள் கிடைத்த தங்கலானுக்கு, ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என படக்குழு காத்திருக்கிறது. அதேநேரம் இதுவரை தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தங்கலான் ஓடிடியில் வெளியான பின்னர் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ரிலீஸுக்கு முன்பே தங்கலான் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைப்போம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். இதனால் தங்கலான் ஓடிடியில் வெளியான பின்னர், சர்வதேச விருதுகளுக்கு அனுப்பி வைக்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.