ஆடி அமாவாசை.. வீடு தேடி வரும் முன்னோர்கள்.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Aadi Amavasai 2024 Pooja Vithi In Tamil : மாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்(Tharpanam) கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். மாதம்தோறும் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

Jul 25, 2024 - 11:56
Jul 26, 2024 - 10:02
 0
ஆடி அமாவாசை.. வீடு தேடி வரும் முன்னோர்கள்.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
Aadi Amavasai 2024 Pooja Vithi In Tamil

Aadi Amavasai 2024 Pooja Vithi In Tamil : ஜோதிட சாஸ்திரப்படி  ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும் நம்மை காண வரும் முன்னோர்களை வரவேற்பதை போலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம்(Tharpanam) கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். 

இந்த ஆண்டு அமாவாசை திதியானது ஆகஸ்ட் 3ஆம் தேதி 03.50 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 04ஆம் தேதி 04.42 மணி வரைக்கும் அமாவாசை திதி உள்ளதால் இரண்டு நாட்களுமே மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். 

பித்ரு லோகத்தில் இருந்து ஆடி அமாவாசையில் கிளம்பும் நம்முடைய முன்னோர்கள்,பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். எனவே அன்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த பல ஆலயங்கள் இருக்கின்றன. அமாவாசை நாளில் புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களை நாம் வழிபட வேண்டும். தமிழ்நாட்டில் தர்ப்பணம் தருவதற்கு புகழ்பெற்ற பல தலங்கள் இருந்தாலும் ராமேஸ்வரம் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம் ஆகும். ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும். 

அமாவாசை நாளில் மறைந்த நம்முடைய தகப்பனார், தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம்  அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேருக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. அமாவாசை நாளில் நாம் வீட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் வாசலில் கோலம் போடக்கூடாது. அதே போல அன்றைய தினம் மாமிச உணவு சமைக்கக்கூடாது. 

வெளியூர்களுக்கு சென்று தர்ப்பணம் தர முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும். வீட்டில் உள்ள  நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கவேண்டும். பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். பசுக்களுக்கு அகத்திக் கீரை உண்ணக் கொடுப்பது மிகவும் சிறப்பு. இப்படி நாம் படையலிட்டு வழிபாடு  செய்வதால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து ஆசிர்வதிப்பார்கள். இதனால் நமக்கு ஏற்பட்டு வரும் சுபகாரிய தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow