ஆடி 18.. பொங்கி வரும் காவிரி.. ஆடி பதினெட்டில் தங்கம் வாங்கினால் இத்தனை நன்மைகளா?

Gold and Silver Purchase in Aadi 18 : ஆடி மாதத்தில் 18ஆம் தினத்தன்று தான் மங்கலமான பொருட்கள் அனைத்தையும் வாங்குவதற்கான ஒரு தினமாக தமிழர்கள் கடைப்பிடித்தனர்.தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி பொருட்களை வாங்குவதால் அவை பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

Jul 25, 2024 - 13:52
Jul 26, 2024 - 10:01
 0
ஆடி 18.. பொங்கி வரும் காவிரி.. ஆடி பதினெட்டில் தங்கம் வாங்கினால் இத்தனை நன்மைகளா?
Gold and Silver Purchase in Aadi 18

Gold and Silver Purchase in Aadi 18 : விவசாயம் செழிக்க உதவும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக  ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆறுகள் பெருகும் இந்த நன்னாளில் தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி பொருட்களை வாங்குவதால் அவை பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். இந்த நாளில்  குபேரனையும் மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.

சூரியனின் தென்திசைப் பயணத்தை, ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று குறிப்பிடுவர். தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடியில் விவசாயிகள் உழவாரப் பணிகளைத் தொடங்குவார்கள். விவசாயம் செழிக்க தேவையான தண்ணீரை வழங்கும் நதிகளை முன்னோர்கள் வழிபட்டனர். அதற்குரிய நாளாக ஆடி 18ஆம் தேதியை தேர்ந்தெடுத்து அந்த விழாவிற்கு ஆடிப் பெருக்கு என்று பெயரிட்டனர். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். 

ஆடிப்பெருக்கு நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18ஆம் நாளில் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆடி மாதம் பதினெட்டாம் தினத்தன்று பெண்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் பலவித சித்தர அன்னங்கள் படைத்து, காவிரி நதி ஓடும் படித்துறைகளில் காவிரி அம்மனை வணங்கி பொங்கலிட்டு, பழங்கள், மஞ்சள், புது தாலி சரடு மற்றும் பல பொருட்களை வைத்து அந்த அம்மனை பூஜை செய்த பின்பு புது தாலி கயிற்றில் மஞ்சள் பூசி வயதில் மூத்த சுமங்கலி பெண்கள் மூலம் அணிவித்து கொள்வர். 

ஆடி 18ஆம் நாளில் இந்த பூஜையை புதுமண தம்பதிகள் செய்வதால் அவர்கள் இருவரும் நோய் நொடிகளற்ற நீண்ட ஆயுளும் சிறந்த மக்கட் பேறும் மங்காத செல்வ வளமும் பெற காவிரி தாய் அருளாசி புரிவாள்.ஆடி பதினெட்டாம் நாளில் புனித நதிக்கரைகளுக்குச் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது. 

ஆடி மாதம் 18ஆம் தினம் ஆடிப் பெருக்கு பன்னெடுங்காலமாக தமிழகத்தில் காவிரி ஆறு பாய்கின்ற கரையோரம் இருக்கும் ஊர்களில் வாழ்கின்ற மக்களால் கொண்டாடப்பட்டு வருகிற ஒரு பாரம்பரிய விழாவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நீர்நிலைகள் உள்ள இடங்களில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும், குறிப்பாக, காவிரி பாயும் தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட காவிரிப்படுகையில் கொண்டாடப்படும் ஆடிபெருக்கு மிக உற்சாகமாகவும், கோலாகலமாகவும், குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம்.

வரலாற்றுப்படி பார்க்கும்போது கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழகத்தில் பாயும் காவிரி ஆறு மற்ற மாதங்களில் சாதாரண அளவில் நதியாக ஓடினாலும், ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி ஆறு ஓடும் நதிக்கரைகளில் இருக்கின்ற படித்துறைகளின் உயரத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும்.

ஆடி மாதத்தில் 18ஆம் தினத்தன்று தான் மங்கலமான பொருட்கள் அனைத்தையும் வாங்குவதற்கான ஒரு தினமாக தமிழர்கள் கடைப்பிடித்தனர்.பிறகு காலமாற்றத்தில் ஆடி மாதங்களில் புது பொருட்கள் வாங்குவது, நற்காரியங்கள் செய்வது போன்றவற்றை தவிர்த்து, மற்ற மாதங்களில் அவற்றை மேற்கொள்ள தொடங்கினர். இவை எப்படி இருந்தபோதும் ஆடி மாதம் புதிய பொருட்கள் எதையும் வாங்கலாம் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். அதிலும் குறிப்பாக ஆடிப் பதினெட்டு என அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு தினத்தன்று தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி பொருட்களை வாங்குவதால் அவை பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

அப்படி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கும் அளவிற்கு பணமில்லையென்றாலும் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் தரக்கூடிய பொருட்களான மஞ்சள் மற்றும் உப்பு போன்றவற்றை ஆடிப்பெருக்கு தினத்தன்று வீட்டிற்கு வாங்குவதால் செல்வ வளம் பெருகும்.சுபிட்சங்களும் பன்மடங்கு பெருகும் என்று ஆன்மிக பெரியோர்கள் தெரிவித்துள்ளனர்.அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம். ஆகையால் குபேரனையும் மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow