Aadi Month 2024 : ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்? - புராண கதை

Aadi Month 2024 Koozh in Amman Temples : ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.

Aug 1, 2024 - 16:46
Aug 2, 2024 - 10:19
 0
Aadi Month 2024 : ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்? - புராண கதை
Aadi Month 2024 Koozh in Amman Temples

Aadi Month 2024 Koozh in Amman Temples : ஆடி மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவார்கள். பலரது வீடுகளிலும் கூழ் தயாரித்து அம்மனை வணங்கி பொதுமக்களுக்கு கூழ் ஊற்றுவார்கள். பாரம்பரியமாக நடைபெறும் கூழ் வார்த்தல் வந்தது எப்படி என்பது குறித்த புராண கதையை கூறியுள்ளார் 
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். 

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 

இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ஜுனரின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம்  தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க  அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை  உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார். அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த  உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்  வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.

“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வருகிற 02.08.2024, வெள்ளிக்கிமை நண்பகல் 12.00 மணிக்கு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஹோமத்துடன் கூழ்வார்த்தல் விழா நடைபெற உள்ளது.

மேலும் இவ்வைபவங்களில் பங்கேற்பதின் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும், நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும், கணவருக்கு தீர்க்காயுள் ஏற்படும், அளவற்ற நன்மைகளைத் தரும், எதிரிகள் தொல்லை விலகும், வேலை வாய்பு கிடைக்கும், நோய்கள் அகலும் என்று  தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow