சென்னை மெட்ரோ ரயிலில் 'கஞ்சா' பயன்படுத்திய இளைஞர்.. திமுக அரசு மீது பாய்ந்த அதிமுக!
Ganja Usage in Chennai Metro Train : அதிக மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் தைரியமாக கஞ்சா பயன்படுத்தியுள்ளது தமிழ்நாட்டின் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Ganja Usage in Chennai Metro Train : தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை அதிகளவில் உபயோகப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மிக முக்கியமாக பள்ளி, கல்லுரிகளின் அருகில் உள்ள கடைகளிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், போலீசார் இதை கண்டும், காணாமல் விட்டு விடுவதாகவும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒருபக்கம் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் உள்ளதால், பலர் மதுவுக்கு அடிமையாகி வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், போதைப்பொருளின் நடமாட்டம் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதை நிரூபிக்கும் விதமாக சென்னையில் இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது சென்னை மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சா பயன்படுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அந்த இளைஞர், ஏராளமான மக்கள் ரயிலில் இருந்தும் ஏதோ தனி இடத்தில் இருப்பதுபோல் சர்வசாதாரணமாக கஞ்சா பயன்படுத்துவது வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.
மெட்ரோ ரயில்களில் எப்போதும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்து பரபரப்பாக இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் சர்வசாதாரணமாக கஞ்சா பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர். தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள். கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருந்தாலும், இளைஞர்கள் யாருக்கும் தெரியாமல், மறைவான இடத்தில்தான் கஞ்சா பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது அதிக மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் தைரியமாக கஞ்சா பயன்படுத்தியுள்ளது தமிழ்நாட்டின் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஏற்கெனவே பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்போது இந்த சம்பவம் அவர்களுக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகி விட்டது. இதேபோல் மெட்ரோ ரயில் நிர்வாகமும் ரயில்களில் இதுபோன்று போதைப்பொருள்களை எடுத்துச் செல்லாத வகையில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?






