ஃபெஞ்சல் புயல் எதிரொலி... பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2015 மற்றும், 2023 ஆண்டு வந்த மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய சேதத்தை சென்னை மக்களால் எப்போதும் மறக்க முடியாது. குறிப்பாக, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
வீடுகள் குளங்களாகின, வாகனங்கள் மழை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் அங்கிருந்த ஏராளமான பொருட்களும் சேதமடைந்தது.
கடந்த புயலின் போது பட்ட கஷ்டங்களை மறக்காத மக்கள், சென்னையில் பலத்த மழை வெள்ள அறிவிப்பு வந்தாலே தங்களது வாகனங்களை இப்படி நிறுத்த ஆரம்பித்து விடுகின்றனர். கடந்த மாதமும் புயல் அறிவிப்பின் போது, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் ஏராளமான கார்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்ற நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் மழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வட சென்னை, முடிச்சூர், தாம்பரம், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்தாலே அதி கனமழை இருக்கும் என்ற நிலையில், தங்களது கார்களை அருகில் இருக்கும் மேம்பாலங்களில் நிறுத்தி விடுகின்றனர்.
சென்னையில் நேற்று மாலை முதல் மிதமான மழை பதிவான நிலையில், இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழத்தொடங்கியுள்ளது. மழை நீர் தேங்கும் பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பாக நவீன இயந்திரங்கள் கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
What's Your Reaction?