இளம்பெண்களுக்கு காதல் வலை கூட்டு பாலியல் வன்கொடுமை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்!
இளம்பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின்னர் விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் பண மோசடி என்றால், இன்னொரு பக்கம் இளம்பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பகீர் கிளப்புகின்றன.
அப்படியொரு சம்பவம் தான் இது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு நாவக்கரை பகுதியைச் சேர்ந்த 26 வயதான ருத்வேந்திரன் என்ற வேன் டிரைவருடன், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாகக் கூறிய ருத்வேந்திரன், சீக்கிரமே உன்னை திருமணம் செய்து கொள்வேன் என சொன்னதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி, “நேரில் சந்திக்கலாம் வா” என நாவக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அந்த இளம்பெண்ணை வரவைத்துள்ளார் ருத்வேந்திரன். இதனையடுத்து சொன்னபடி அங்கே சென்ற இளம்பெண்ணை, ருத்ரவேந்திரன் தனது நண்பரான தனுஷுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து இளம்பெண் கொடுத்து புகாரின் பேரில், தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசார், ருத்வேந்திரன், தனுஷ் இருவரையும் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில், ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் உஷாரான போலீஸார், கைதான இருவரும் செல்போனில் யாருடன் அதிகமாக பேசியுள்ளனர் என்பதை விசாரிக்கத் தொடங்கினர். அதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா போத்துவா கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற இளம்பெண் தான், பல இளம்பெண்களின் செல்போன் நம்பர்களை இவர்களுக்கு வழங்கியது தெரியவந்துள்ளது. மேலும், இப்படி பல பெண்களுக்கு இன்ஸ்டாவில் காதல் வலை விரித்து, அவர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வதோடு, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி, அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே மற்றொரு இளம்பெண்ணும் இவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்நிலையம் செல்ல, இச்சம்பவத்தில் தொடர்புடைய செளந்தர்யா என்ற பெண் உட்பட 8 பேரை, போலீஸார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். அப்பாவி இளம்பெண்களை குறிவைத்து ஒரு நெட்வொர்க் போல வேலை பார்த்துள்ளது இந்த கும்பல். இதனால் இவர்களுக்கு பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இளம்பெண்களின் செல்போன் நம்பர்கள், செளந்தர்யாவுக்கு எப்படி கிடைக்கின்றன என்பதையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை பகுதி மக்களை அதிர வைத்துள்ள இந்தச் சம்பவத்தில், இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






