சென்னை பெரம்பூர் ஜமாலியா முதல் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். இவர் கடந்த சில நாட்களாக தனது வீட்டை மறு சீரமைப்பு செய்வதற்காக கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக வீட்டில் இருந்து இடிக்கப்பட்ட கட்டுமான கழிவுகளை தனது வீட்டின் வெளியே கொட்டி வந்துள்ளார்.
இவர் கட்டுமான பொருட்களை கொட்டும் இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்பவர் கார் விடுவது வழக்கம். இது குறித்து ஏற்கனவே கிருஷ்ண குமாருக்கும், பாஸ்கருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு மீண்டும் கிருஷ்ணகுமார் காரை நிறுத்த சென்றபோது அந்த இடத்தில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இதனைக் கண்ட வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், பாஸ்கர் குடும்பத்தினரோடு சண்டை போட்டுள்ளார்.
அப்போது திடீரென கிருஷ்ணகுமார் தனது காரில் இருந்து பெரிய கத்தி ஒன்றை எடுத்து வந்து பாஸ்கர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில், அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, கத்தியுடன் கிருஷ்ணகுமார் தன்னை கொலை செய்ய வருவதாக பாஸ்கர் ஓட்டேரி நிலையத்தில் புகார் அளித்தார். ஓட்டேரி போலீசார் வீடியோ ஆதாரத்தை வைத்து இன்று காலை வழக்கறிஞர் கிருஷ்ணகுமாரை கைது செய்து ஓட்டேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.