சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?

Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.

Sep 9, 2024 - 17:23
Sep 9, 2024 - 17:57
 0
சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை

Caste Wise Census in Tamil Nadu : இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பதிவு-69 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948-இல் உள்ள விதிகளின்படி நடத்தப்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951 இல் செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் சாதிவாரியான மற்றும் பழங்குடி வாரியான தரவுகள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-ன் கீழ் கணக்கிடப்படுகிறது.

2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், கடந்த ஆண்டு பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. இதனையடுத்து, நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியுமா என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் அது தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன,

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை எனக்கூறியிருக்கும் மத்திய அரசு, ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த ஆந்திரம், பீகார் மாநிலங்களுக்கு அந்த கேள்விகளை அனுப்பி பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருக்கும் மாநிலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலம், RTI கேள்விகளுக்கு விரிவான, விளக்கமான பதிலை வழங்கியிருக்கிறது. 

அதில் மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பது உறுதியாகியிருக்கிறது. 

தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அந்த வழக்குகளின் விசாரணையின் போது வலுவான வாதங்களை முன்வைக்க உதவக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த தயங்குவது ஏன் என்ற கேள்வி பலர் மத்தியில் எழத்தொடங்கியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow