பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் தங்கவேல். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், கவிதா என்ற மகள், குமரேசன் என்ற மகன் ஆகியோரும் உள்ளனர். மகள் கவிதாவுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் குமரேசன் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தங்கவேலு, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் தங்கவேலுவை, அவரது வீட்டில் யாரும் மதிப்பதில்லை என்றுக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு சென்ற தங்கவேல், வழக்கம்போல மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்றிப்போக, கோபமான தங்கவேல் மாரியம்மாளின் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியான அவர்களது மகள் கவிதா, தந்தை தங்கவேலுவை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், ஆத்திரம் தீராத தங்கவேலு, மகள் என்றும் பாராமல், கவிதாவின் முதுகிலும் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம் கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே தப்பியோடிய தங்கவேலை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வீட்டில் தன்னை யாரும் மதிப்பதே இல்லை, அந்த ஆத்திரத்தில் தான் கொலை செய்ததாக கூறி போலீஸாரை அதிர வைத்துள்ளார். மதுவுக்கு அடிமையானதால் தான், தங்கவேலுவுக்கு அவரது சொந்த வீட்டிலேயே மரியாதை கிடைக்கவில்லை. ஆனால், அதனை உணராத தங்கவேல், மனைவியை கொலை செய்ததோடு, மகளையும் கொடூரமாக தாக்கியது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.