வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்.. ஆய்வு அறிக்கை வெளியீடு..!

பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mar 13, 2025 - 21:31
 0
வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்.. ஆய்வு அறிக்கை வெளியீடு..!
வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்.. ஆய்வு அறிக்கை வெளியீடு..!

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல் முறையாக தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வு அறிக்கை 2025-26ஐ முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.  

இந்த ஆய்வறிக்கையில் வலுவான கொள்கையின் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில், தனி நபர் வருமானம் ரூ.2 லட்சத்து 78ஆயிரமாக அதிகரிக்கும் என்றும், இது தேசிய சராசரியான 1லட்சத்து 69ஆயிரத்தை காட்டிலும் 1புள்ளி64 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, சவால்களை வியூகம் சார்ந்த திட்டமிடல் வாயிலாக வெற்றிகரமாக எதிர்கொண்டு இலக்கை எட்டும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக பொருளாதார ஆதரவு வழங்குவதன்  மூலம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதாகவும், 2019-20ல் தமிழகத்தின் மொத்த பயிர்ப்பரப்பில் 32.1 சதவீதமாக இருந்த நெல்லின் பங்கு 2023-24ல் 34.4சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எண்ணெய்வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தி திறனில் முதலிடத்திலும் , மக்காச்சோள உற்பத்தி திறனில் 2ம் இடத்திலும், நெல் உற்பத்தி திறனில் 3ஆம் இடத்திலும் உள்ளதாகவும், ரசாயன உரங்களையும், நிலத்தடி நீரையும் அதிகமாகப் பயன்படுத்துவதன் வாயிலாக தமிழ்நாட்டின் முதன்மைப் பயிர்களின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் 2019-20ல் 1புள்ளி83 லட்சம் கோடியில் இருந்து 2023-24ல் 3.58 லட்சம் கோடியாக அதிகரித்து வணிக வங்கிகள் வழங்கும் வணிகக் கடனில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்றும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை 11.90 சதவீதமாக பங்களிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2019-20 முதல் 2023-24 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் 2.5லட்சம் கோடியில் இருந்து 3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு 5,909 கோடியில் இருந்து 20ஆயிரத்து 157 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு, தமிழகத்தின் சேவைத் துறைகள் வேகமாக மீண்டெழுந்தன. மாநில வளர்ச்சியில் கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow