திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது.. திமுகவை மிரட்டி வருகிறார் - எல்.முருகன் சாடல்
தமிழக அமைச்சரவையில் இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார் என்றும் பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி, மேப்பல் கிராமங்களில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது தேவைக்காக திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். ஆட்சியில் பங்கு என்ற அவரது தேவை இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் திமுக கூட்டணியினருக்கு அமைச்சரவை பங்கு என்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் விசிக ஒட்டுமொத்த தலித்துகளின் கட்சி கிடையாது. பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது.
அமெரிக்கா சென்ற முதல்வர் தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் செயல்படும் கம்பெனிகளின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் நலம் குறித்து சிகிச்சைக்காக முதல்வர் வெளிநாடு சென்றிருந்தால், அது பற்றி வெளிப்படையாக தெரிவித்து இருக்கலாம்.
செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் செய்தியாளர்களாகி விட்டனர். வரைமுறை இன்றி செயல்படும் youtube சேனல்களை மத்திய அரசு வரைமுறைப்படுத்த கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது. இப்போது youtube சேனல் நடத்துபவர்களுக்கும் சமுதாய கடமை உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
உத்தரகாண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறு நகரங்களிலும் தனியார் எஃப்.எம். ரேடியோ நடத்த அலைவரிசை வழங்கப்பட்டு வருகிறது. பாஜகவிற்கு கிடைத்த முருக பக்தர்களின் ஆதரவை பார்த்து திமுக, முருகன் மாநாடு நடத்தியுள்ளது. இது எல்லாம் திமுகவின் தேர்தல் அரசியல் வெளிப்பாடு” என தெரிவித்தார்.
முன்னதாக, முன்னதாக, அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். அந்த மாநாட்டில் மதவாத சக்தியான பாஜக, சாதிய கட்சியான பாமக தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசியிருந்த திருமாவளவன், “மது ஒழிப்பு பிரச்சனையில் பிஜேபி உட்பட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் பாஜகவுக்கு எங்களுடன் சேர முடியாத ஒரு நெருடல் உள்ளது. பாமகவும் மதுவிலக்கை சொல்லக்கூடிய கட்சி தான். ஆனால் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாமகவுக்கும் கசப்பான அனுபவங்கள் உள்ளது. எனவே அவர்களுடன் எந்த காலத்திலும் எங்களால் சமரசம் செய்ய முடியாது. மற்ற கட்சிகள் யார் வேண்டுமென்றாலும் வரலாம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?