சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் விழுப்புரம், கோவை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையில் பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, எஸ்.என்.ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகளிலும், தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 நாட்கள் நடந்த சோதனையின் மூலம், எந்த அரசு கணக்கிலும் சேராமல் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறையின் அறிக்கையில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.