TVK Vijay: “தவெக தலைவர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்..” க்ரீன் சிக்னல் கொடுத்த செல்வப்பெருந்தகை!

மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசியிருந்தார் விஜய். அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் பேச்சு குறித்து, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கருத்துத் தெரிவித்துள்ளார்.

Jul 3, 2024 - 18:18
 0
TVK Vijay: “தவெக தலைவர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்..” க்ரீன் சிக்னல் கொடுத்த செல்வப்பெருந்தகை!
விஜய்க்கு செல்வப்பெருந்தகை ஆதரவு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய், 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், கடந்த சில தினங்களாக தீவிரமாக அரசியல் பேசி வருவதை பார்க்க முடிகிறது. முக்கியமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரத்தில், நேரடியாக களத்திற்கே சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். இதற்காக ஜூன் 22ம் தேதி அவரது 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், இந்தாண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழாவை விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். ஜூன் 28ம் தேதி முதற்கட்டமாக 750 மாணவர்களுக்கு கல்வி விருதுகளும் ஊக்கத் தொகையும் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் இரண்டாவது கட்ட விருது விழா நடைபெற்று வருகிறது. இதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட 19 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடம் பிடித்த 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் முன்னர் நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறிய விஜய், அதனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார். கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும், மாநில உரிமைகளுக்கு மட்டும் நான் இதை கேட்கவில்லை, மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பன்முகத்தன்மை என்பது பலம் தானே தவிர பலவீனம் கிடையாது. மாநில சிலபஸில் படித்துவிட்டு என்சிஇஆர்டி சிலபஸில் தேர்வு வைத்தால் அது எப்படி என கேள்வி எழுப்பினார். 

அதேபோல் மே 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சில குளறுபடிகளை சுட்டிக் காட்டிய விஜய், அதன் மீதான நம்பகத்தன்மையே மக்களுக்கு சுத்தமாக போய்விட்டது எனக் கூறினார். மேலும் ஒன்றிய அரசு காலம் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதனை சீக்கிரமாக சரி செய்ய வேண்டும் என்றார். அதேபோல், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவருதான் இதற்கு நிரந்தர தீர்வு. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சிறப்பு பொதுப்பட்டியலில் கொண்டுவந்து கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ள எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு வேண்டுமென்றால் அவர்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் விஜய் கூறியிருந்தார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதோடு, அதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கும் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசியது பற்றி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் கூற்றை பிரதிபலித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலும், பாசிச பாஜக மட்டும் தனியாக உள்ளதையும் மக்கள் நன்கு அறிந்து விரைவில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் 2026 தேர்தலில் போட்டியிடவிருப்பதால், அவரது கருத்துகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர். அதேபோல் விஜய்யின் பிறந்தநாளுக்கும் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், விசிக ஆகிய கட்சிகளின் பெரும் புள்ளிகள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு விஜய்யும் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார். விஜய்யை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என சில பெரிய கட்சிகள் பிளான் செய்து வருகின்றன. முக்கியமாக நாம் தமிழர் சீமான் விஜய் உடனான கூட்டணி பற்றி மறைமுகமாக பேசி வருகிறார். இந்தப் போட்டியில் காங்கிரஸும் இணைந்துள்ளதா என கேள்வி எழும் அளவிற்கு, அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை விஜய்க்கு ஆதரவாக அவ்வப்போது வாய்ஸ் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow