அதிரடி காட்டும் சென்னை போலீஸ்.. 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது...

புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

Jul 15, 2024 - 21:26
Jul 18, 2024 - 10:48
 0
அதிரடி காட்டும் சென்னை போலீஸ்.. 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது...
சென்னை காவல்துறை

சென்னையில் 2 நாட்களில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 81 குற்றவாளிகளை நேரடியாக தணிக்கை செய்து 77 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்த நிலையில், கடந்த பதினோராம் தேதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலைக்கு பின்னணியில் யார் உள்ளனர், ஆயுதங்கள் கொண்டு வந்தது எப்படி ஸ்கெட்ச் போட்டது எப்படி என பல கோணங்களில் பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது, தற்காப்புக்காக ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்தியேலேயே மரணம் அடைந்தார். அதேபோல, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக புதுக்கோட்டையில் துரைசாமி என்ற ரவுடியை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சென்னையில் 2 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 81 குற்றவாளிகளை நேரடியாக தணிக்கை செய்து 77 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக 14.07.2024 மற்றும் 15.07.2024 ஆகிய 2 நாட்கள் தீவிர தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (DARE) எதிரான இந்த சிறப்பு சோதனையில் R-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஐயப்பன், வ/33, த/பெ.மணி, S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் டேனியல் ஜோசப், வ/24, த/பெ.சதீஷ்குமார் மற்றும் நவீன்குமார், வ/25, த/பெ.கண்ணன், S-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் அருண், வ/23, த/பெ.அசோக், D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கலைமணி, வ/30, த/பெ.சுப்பிரமணி, F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில்  சஞ்சய், வ/24, த/பெ.தர்காமோகன், J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நெல்சன், வ/47, த/பெ.பொன்னப்பன் ஆகிய குற்றவாளிகள் உட்பட 77 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதர 4 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தலைமறைவாகயிருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow