சிவகாசி திமுகவில் மேயருக்கு எதிராக போர்க்கொடி.. வெளிநடப்பு செய்த மேயர்..!
சிவகாசியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்காமல் மேயர் சங்கீதா இன்பம் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளிலும் வெற்றிவாகை சூடியது தி.மு.க கூட்டணி. கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் மேயர் தவிர்த்து, மற்ற 20 மாநகராட்சிகளிலும் தி.மு.கவினர்தான் மேயர் பதவி வகிக்கிறார்கள். இந்த நிலையில், திமுகவின் கவுன்சிலர்களுக்கும், மேயர்களுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது என்றால் மிகையாகாது.
அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் கோவை, திருநெல்வேலி மேயர்கள் ராஜினாமா செய்தது, கும்பகோணம், மதுரை மேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது என மேயர்களுடன் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து பயணிப்பதில்லையே என்ற பெரும் கவலையே திமுகவிற்கு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. அமைச்சர்கள் என்னத்தான் கவுன்சிலர்களை சமாதானப்படுத்த நினைத்தாலும், அதையெல்லாம் கவுன்சிலர்கள் காதில் வாங்குவதுபோல் தெரியாத ஒரு சூழல் உருவானதாலேயே மேயர்களின் ராஜினாமா நடைபெற்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த பிரச்சனைகள் எல்லாம் அடங்கி, தற்போது மாவட்ட செயலாளர்களை மாற்றுவது, நியமிப்பது என தேர்தலுக்கான பணிகளை செய்து வருகிறது திமுக தலைமை.
இந்த சமயத்தில் தான் யாரும் எதிர்பாராத நேரத்தில் சிவகாசி கவுன்சிலர்கள் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகளை கொண்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருந்த சிவகாசி மாநகராட்சி முற்றிலுமாக திமுக வசம் மாறியது. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த மாநகராட்சிக்கு திமுகவைச் சேர்ந்த பெண் மேயர் சங்கீதா இன்பம் பதவி வகித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மேயராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.
இந்த நிலையில் மார்ச் 11ம் தேதி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில் ஆறு தீர்மானங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினர். இதற்கு மேயர் சங்கீதா எந்தவித பதிலும் தெரிவிக்காமல் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைக் கண்டித்தும் மாமன்ற கூட்டத்தை துணை மேயரை வைத்து நடத்தவும் வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே மேயர் சங்கீதா இன்பம் வார்டு பணிகளை சரியாக செய்யவில்லை எனவும், துணை மேயரை மதிப்பதில்லை எனவும் புகார்களை அடுக்குகின்றனர் மாமன்ற உறுப்பினர்கள். இந்நிலையில் இன்று மாமன்ற கூட்டத்தில் வெட்ட வெளிச்சமாக வெடித்துள்ள இந்த பிரச்சனை தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
நிலை இப்படி இருக்க, சிவகாசியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும், மேயருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை தலைமை சமாதானம் செய்துவைக்குமா அல்லது கோவை, திருநெல்வேலி மேயர்களைப் போல, சிவகாசி மேயர் சங்கீதா இன்பமும் ராஜினாமா செய்வாரா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






