'இதற்கெல்லாம் குண்டர் சட்டம் போடுவதா?'.. காவல்துறையை கண்டித்த உயர்நீதிமன்றம்!
'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
சென்னை: கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. 7,200 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கள்ளச்சந்தையில் விற்க முயன்றதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சத்தியமூர்த்தியின் மனைவி பூஞ்சோலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 'மனுதாரரின் கணவர் அரசு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தியிருந்தால் அவர் மீது குண்டர் சட்டம் போட்டிருக்கலாம். ஆனால் இது போன்ற செயல்களுக்காக குண்டர் சட்டம் போடக்கூடாது' என்று போலீசாரிடம் அறிவுத்தினார்கள்.
மேலும் தேவைப்படாத நபர்களுக்கு ரேசன் கடை அரிசியை விற்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், சத்திய மூர்த்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். தொடர்ந்து, மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத் தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் குண்டர் சட்டங்கள் அதிகம் போடப்படுவதாக புகார்கள் வெளியாகி உள்ளன. 'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், சென்னை காவல் துறை அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. இதை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அவதூறு வழக்குகளுக்கு குண்டர் சட்டம் போடக்கூடாது என்றும் எந்தெந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டம் போடப்படுகிறது? என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?